கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் கே.பி.விஸ்வநாதன் காலமானார்.
கேரளா முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கே.பி.விஸ்வநாதன் இன்று காலை திருச்சூரில் காலமானார்.
திருச்சூரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே.பி.விஸ்வநாதன், ஏப்ரல் 22, 1940-ல் பிறந்தார். திருச்சூர் கேரள வர்மா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
இளைஞர் காங்கிரஸ் மூலம் தீவிர அரசியலில் நுழைந்தார். (1967-70) இடைப்பட்ட காலத்தில் மாவட்ட அளவில் அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார்.
கருணாகரன், உம்மன் சாண்டி தலைமையிலான அமைச்சரவையில் கே.பி.விஸ்வநாதன் இரண்டு முறை வனத்துறை அமைச்சராக இருந்துள்ளார். இரண்டு முறையும் தனது பதவிக் காலத்தை முடிப்பதற்கு முன்பே அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
1987 மற்றும் 2001-ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், அவர் கொடகரா தொகுதியில் இருந்து தொடர்ந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006 மற்றும் 2011-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரிடம் அவ்ர் தோல்வியைச் சந்தித்தார்.
இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஸ்வநாதன் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் திருச்சூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தலைவர்கள்,பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.