இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதற்பிறகு மேலும் வலுப்பெற்று 25ம் தேதி புயலாக உருவெடுக்கும். ஓமன் நாட்டின் பரிந்துரைப்படி இந்த புயலுக்கு ரீமால் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் வருகிற 26ம் தேதி மாலை தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என கண்காணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
தமிழகம் – புதுச்சேரியில் மழை
மேலும் தெற்கு கேரளா மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளின் மீதும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் வருகிற 28ம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.