கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தை கண்டித்து வேலூரில் தேமுதிக ஆர்ப்பாட்டம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தேமுதிக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விஷச் சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக முதல்வர் மு. க. ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். விஷச் சாராயம் அருந்தி இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கியது கடும் கண்டனத்திற்கு உரியது. அரசு பணியாற்றி இறக்கும் போலீசாருக்கு கூட தலா ரூ. 3 லட்சம் வழங்கும் இந்த அரசு விஷச் சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் கொடுத்துள்ளது வெட்கக்கேடானது என கண்டனம் தெரிவித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். கூட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷங்களும் கள்ளச்சாராயத்தை விஷச் சாராயம் என்று மாற்றிச் சொல்லி பொதுமக்கள் இறந்ததற்கு காரணம் கற்பிக்கும் அரசின் கையாலாகாத தனத்தை சுட்டிக்காட்டியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் பிரதாப் முன்னிலை வகித்தார். இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.