புதுடில்லியில் நேற்று மாலை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர்
திரு.அண்ணாமலை அவர்கள் தலைமையில், மாநிலப் பொதுச்செயலாளர்
திரு. பொன்பாலகணபதி அவர்கள், மாநில மீனவர் அணித்தலைவர்
திரு.முனுசாமி அவர்கள். ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் திரு.தரணி
முருகேசன் அவர்கள், மற்றும் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவ
சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் குழுவாக, மாண்புமிகு மத்திய
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுடன் சந்திப்பும்
பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
அப்போது வெளியுறவுத்துறை அமைச்சர், மற்றும், உடனிருந்த வெளியுறவுத்துறை செயலாளர், மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள்,ஆகியோரிடம், ராமநாதபுரம் பகுதியில் சமீபத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் மீனவ சொந்தங்களின் குறைகள் எல்லாம் எடுத்துரைக்கப்பட்டது.
முக்கியமாக விசைப்படகு சங்கத்தின் தலைவர் பேசும்போது சர்வதேச ஆழ்கடல் பகுதியில், இலங்கை கடற்படைப்படகு மோதலால் இறந்து போயிருக்கும் ஒரு மீனவர் மற்றும் காணாமல் போயிருக்கும் மீனவர் குறித்து பேசப்பட்டது. காணாமல்போன மீனவரை விரைந்து கண்டுபிடிக்க வேண்டுகோள் விடுத்தும். இறந்து போன மீனவர் உடலை ஆழ்கடல் பகுதியில் இருந்து விரைவாக மீட்டதற்காகவும் மீனவர் சங்கத் தலைவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அதே நேரத்தில் இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்க கூடாது என்று கோரிக்கையும் இரண்டு சங்கங்களின் சார்பில் வலிமையாக எடுத்துரைக்கப்பட்டது அதற்கு பதில் அளிக்கும் வகையில் வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் இலங்கையின் தூதரை வரவழைத்து இது போன்ற சம்பவம் இனி நடைபெறக்கூடாது என்று கடுமையான கண்டனம் தெரிவித்ததை எடுத்துக் கூறினார்.
விசைப்படகு சங்கத்தின் தலைவர் இலங்கைச் சிறையிலே அடைபட்டிருக்கும்,
இந்திய மீனவர்களை எல்லாம் விரைவாக மீட்டு தர வேண்டும் என்ற
கோரிக்கையை முன் வைத்தார். அதற்கு பதில் அளித்த வெளியுறவுத்துறை
அமைச்சர் அவர்கள் இந்த பத்தாண்டு கால ஆட்சியில், இலங்கைக்
கடற்படையின் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் முற்றிலுமாக தடுக்கப்பட்டது.
என்றும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டால் ஒரு சில மாதங்களில்
உடனடியாக மீட்கப்பட்டார்கள் என்பதையும் புள்ளிவிபரங்களோடு பதிவு
செய்தார்.
தற்போதைய நிலவரப்படி, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக,மொத்தம் 273 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.இவர்களில் 204 மீனவச்சொந்தங்கள் விடுவிக்கப்பட்டு தமிழகத்திற்கு பாதுகாப்பாக மீட்டுக்கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். இலங்கை காவலில் எஞ்சியிருக்கிற 69 மீனவர்களில், 61 பேர் நீதிமன்ற காவலில் இருக்கிறார்கள்.மீதம் எட்டு பேர் தண்டனைக் கைதிகளாக இருக்கிறார்கள். இது தவிர மூன்று விசைப்படகு உரிமையாளர்களுக்கு அபராதம் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் சுமூகமாக தீர்வுகள் காணப்பட்டு அனைவரும் தமிழகத்திற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்படுவார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு முதல் வெளியுறவுத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இரண்டு பேர் என்று நான்கு பேர் இந்திய அரசின் தரப்பிலும் அதேபோல நான்கு பேர் இலங்கை அரசின் தரப்பிலும் (JWG)இணைந்து செயல்படும் குழு அமைத்து இருதரப்பிலும் உள்ள மீனவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வருவதாகத் தெரிவித்தனர். இந்த இருதரப்பு ஆய்வுக்குழு, மிக விரைவில் கூடவிருப்பதாகவும், அப்போது அனைத்து பிரச்சினைகளும் சுமூகமாக தீர்க்கப்படும் என்றும் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய, இலங்கை மற்றும் இந்திய மீனவ பிரதிநிதிகள் சந்திப்பை இந்திய அரசு
ஏற்பாடு செய்யவேண்டும் என்று மீனவ சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
மீனவ நலன்களை பாதுகாக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
முனைப்புடன் இருப்பதாகவும், மீனவர்களின் குறைகளுக்கு உடனடி
நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சமீபத்தில் காணாமல்
போன மீனவரையும் விரைந்து கண்டுபிடிப்பதற்காக இந்திய மற்றும் இலங்கை
கடற்படை அதிகாரிகள் துணையோடு விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பணியில் இருக்கும் போது மரணம் ஏற்பட்டால் மீனவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வகையிலே விபத்துக்கள் அல்லாத ஆயுள் பாதுகாப்பு திட்டம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், மீனவர்களுக்கு டீசலுக்காக வழங்கப்படும் மானியம் அதிகரிக்கப்படவேண்டும் என்றும், மீனவ சங்கங்களின் சார்பிலே பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மீன்வளத் துறை அதிகாரிகள் இன்சூரன்ஸ் திட்டம் ஏற்கனவே இரண்டு லட்சம் ஐந்து லட்சம் என்ற இரு அளவீடுகளில் இருப்பதாகவும், டீசல் மானியம் குறித்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
இது தவிர மிக முக்கிய கோரிக்கையாக 25 ஆண்டுகளாக மீனவர்கள் சேகரிக்கத்தடை செய்யப்பட்ட sea cucumber எனப்படும் கடல் வெள்ளரிக்கான தடையை நீக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். 1997-1998 ஆம் ஆண்டில் தடை செய்யப்பட்ட காரணங்களை ஆய்வுசெய்து மீனவர்களின் கோரிக்கையைப் பரிசீலனை செய்வதாக மீன்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஃபைபர் படகுகளுக்கு கூடுதலாக மானியம் வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். மத்ஸ்ய சம்பந்த யோஜனா திட்டத்தில் இதுவரை தமிழக மீனவர்களுக்கு ரூ.540 கோடிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும்.இன்னும் பல தமிழக மீனவர்களுக்கு உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாகவும், மீனவளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். இந்திய தமிழக மீனவர்களுக்கு உதவிகள் செய்ய வெளியுறவுத்துறை அதிகாரிகளும்,மீன்வளத்துறை அதிகாரிகளும். எப்போதும் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் உறுதி தெரிவித்தனர்.
தமிழகத்திலிருந்து வந்திருந்த மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் பாஜக நிர்வாகிகளும், தன்னுடைய மூத்த அதிகாரிகளை இந்த கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்த வெளியுறவுத்துறை அமைச்சருக்கு நன்றிகள் தெரிவித்தனர். இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் நம்பிக்கை பெற்ற மீனவர்சங்கங்களின் தலைவர்கள். பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு, இலங்கை கடற்படையின் தாக்குதலை, துப்பாக்கி சூட்டை முற்றிலுமாக தவிர்த்ததற்காகவும், அதேபோல கைது நடவடிக்கைகளை கணிசமாக குறைத்ததற்காகவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ததற்காகவும், மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொண்டனர்.