கோவை பா.ஜ.க வின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா!!!
2/26/2025
0
கோவை, அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து பீளமேடு பகுதியில் கட்டப்பட்டு உள்ள பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு, சாலையின் இரு புறங்களிலும் கூடி இருந்த பா.ஜ.க தொண்டர்கள், மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர் . விழா மேடைக்கு வந்த அமைச்சர் அமித்ஷாவுக்கு, பாரத் மாதா கி ஜெய், என்றும் வந்தே மாதரம் என்றும் கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் முதலில், வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. தொடர்ந்து வரவேற்புரை நிகழ்த்திய சக்கரவர்த்தி, நாம் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலை பார்த்தது இல்லை, ஆனால் இன்று இங்கு ஒரு இரும்பு மனிதரை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இன்று மகா சிவராத்திரி கொண்டாடிக் கொண்டு இருக்கும் வேளையில், மூன்று இடங்களில் நாம் இதுபோன்ற நடத்துகிறோம். இந்த மூன்று இடங்களிலுமே சிவன் வீற்றிருக்கக் கூடிய இடங்களாக உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் 14 அலுவலகங்கள் திறக்கப்பட்டு இருக்கிறது, இன்று மேலும் மூன்று அலுவலகங்கள் திறக்கப்படுகிறது, அதை அமித்ஷா அவர்கள் திறந்து வைப்பதை பெருமையாக கருதுகிறோம் என்று கூறினார்.
