இளம்பெண்கள் திருமணமானால் தாய் வீட்டார் மகிழ்ச்சி அடைவர்; அவர்கள் தாய்மை அடையும்போது பேரின்பத்தைப் பெற்று வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி, மகிழ்வார்கள். தமிழ்நாடு அரசும் தற்போது ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்துகிறது.
ஆனால், ஜாதி, மதம், இன, மொழி பேதமின்றி, தனது தொகுதியைச் சேர்ந்த 1,072 கர்ப்பிணிகளை ஒன்று சேர்த்து, வளைகாப்பு நிகழ்ச்சியை தனது சொந்தச் செலவில் நடத்தியிருக்கிறார் அணைக்கட்டு எம்எல்ஏவும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முன்னாள் உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, கெங்கநல்லூர் கலைஞர் நூற்றாண்டு விழா அரங்கில் அண்மையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை அறிந்தோர் வியந்து பாராட்டுகின்றனர்.
வேலூர் மேயர் சுஜாதா, எம்எல்ஏ அமலு விஜயன், முன்னாள் எம்எல்ஏ சி.ஜெயந்தி பத்மநாபன் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய பெண் வி.ஐ.பி.க்கள் பெண்களுக்கு நலங்கு வைத்து, கர்ப்பிணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
விழாவை நடத்தி வைத்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியபோது, 'பெண்கள் சாதாரணமாக இருக்கும்போது, எப்படி வேண்டுமென்றாலும் போகலாம். வரலாம். ஆனால், நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும்போது, ஒரு குழந்தையைச் சுமந்துகொண்டு அப்படி செல்ல முடியாது. இதுபோன்ற நேரங்களில் வளைகாப்பு செய்து சீர்வரிசையை தாய் வீட்டில் கொடுப்பார்கள். வசதி இல்லாதவர்கள் வளைகாப்பு செய்ய முடியவில்லை என்ற தவிப்பைப் போக்கும் விதமாக, சிறப்பான நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இது ஒரு ஒரு நல்ல காரியம்' என்றார்.
'இந்தச் சாதனையை எப்படி நடத்தி முடித்தீர்கள்' என்று ஏ.பி.நந்தகுமாரிடம் கேட்டபோது:
'ஒரு தாய் கருவுற்றது முதல் குழந்தை பிறந்து வளரும் வரையில் பெண்களுக்கு என்னென்ன வேண்டுமோ? அதை பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பெண்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி, அவர்கள் 'அப்பா' என்று அன்போடு அழைக்கும் வகையில் விளங்குகிறார்.
அவரது வழியில், அணைக்கட்டு தொகுதியில் அரசு நலத் திட்ட உதவிகளைப் பெற்றுத் தருகிறேன். தனிப்பட்ட முறையிலும் உதவிகளைச் செய்து தருகிறேன்.
2016-இல் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற என்னை 2021-இல் இரண்டாம் முறையாகவும் வெற்றி பெற செய்தனர். காட்பாடி அருகேயுள்ள லத்தேரி கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்தவன். இந்தத் தொகுதியில் எனக்கு சொந்தப் பந்தமோ, நண்பர்களோ கிடையாது. என்னை எம்எல்ஏவாக்கிய மக்களுக்கு 9 ஆண்டுகளாகச் சேவை செய்து வருகிறேன். தொடர்ந்து செய்வேன்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், முதல்வர் பிறந்த நாளையொட்டி தொகுதியில் இருக்கும் கர்ப்பிணிகளை அழைத்து 'சமுதாய வளைகாப்பு' நடத்தலாம் என யோசித்தேன். தொகுதியில் இருக்கும் திமுக நிர்வாகிகளை ஆலோசித்தேன். அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களில் உள்ள கர்ப்பிணிகள் பட்டியலைப் பெற்று, அவரவர் வீடு தேடி சென்று, அழைப்பு விடுத்தோம். நிகழ்ச்சி நாளன்று, கட்சி நிர்வாகிகளோடு மகளிரணி நிர்வாகிகள் உடன் சென்று 10 பஸ்கள், 10 வேன்களில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அழைத்து வந்தோம்.
பள்ளிகொண்டா அருகேயுள்ள விரிஞ்சிபுரத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்கள் 15 பேரும், தொகுதியில் உள்ள கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த 25 பெண்களும் நிகழ்ச்சியில், அவரவர் சம்ப்ராதயப்படி பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து, மஞ்சள், குங்குமம், சந்தனம், கண்ணாடி வளையல்கள், மலர் மாலைகளை உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மகளிரணி நிர்வாகிகள் அணிவித்தனர். பின்னர், அவர்கள் சுகப் பிரசவம் பெற தேவையான ஆலோசனைகளை வழங்கினோம். தாயும் சேயும் நலமோடு இருக்க நல்லதொரு வழிகாட்டுதல்களையும் வழங்கினோம்.
பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் தாய் வீட்டு சீராக, 'அன்பு அண்ணன்' என்ற ஸ்தானத்தில் சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட இளம்பிள்ளையில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட பட்டுச் சேலைகள், சீப்பு, சோப்பு, கண்ணாடி, மசக்கை அரிசி உள்ளிட்ட 20 வகையான பொருள்களை வழங்கினோம். நிகழ்ச்சி முடிந்தவுடன் கர்ப்பிணிகளுக்கும், நிகழ்ச்சியில் பங்கேற்ற 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவுகளையும் வழங்கினோம்.
கர்ப்பிணிகளை விழாவுக்கு எப்படி அழைத்து வந்தோமோ, அதே போலவே அவர்களது இல்லத்தில் வீடு தேடி அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தோம். இனி தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துவோம். நிகழ்ச்சி நிறைவு பெற்றபோது, வேலூர் சங்கரன்பாளையத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற கர்ப்பணி வந்தார். அவர் வேறு தொகுதி என்றபோதிலும், சீர்வரிசை பொருள்களைக் கொடுத்து அனுப்பினோம்' என்கிறார் ஏ.பி.நந்தகுமார்.