தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம் மக்கள் ஏமாற்றம்!!!
11/23/2025
0
தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், காமராஜ் நகரில் அரசு மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன. பிரதம மந்திரி ஜன் விகாஸ் காரியகிராம் திட்டத்தின் கீழ், மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், 136.35 கோடி ரூபாய் மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.ஏழு மாடிகளுடன் கூடிய இந்த கட்டிடத்தில், 687 படுக்கை வசதிகள் உள்ளன. 95 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், பல்நோக்கு மருத்துவமனை என துவங்கப்பட்ட இத்திட்டம், தற்போது மகப்பேறு, குழந்தைகள் நலனுக்கான உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.ஏற்கனவே உள்ள மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தைகள் நலப் பிரிவுகளுக்கான உள்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இப்பிரிவுகளுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த முடிவால், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்குத் தேவைப்படும் மற்ற நவீன சிகிச்சைகளுக்குத் திருநெல்வேலி, மதுரை போன்ற நகரங்களை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
