மதுரையில் குப்பையில் வீசப்பட்ட 25 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்களுக்கு குவியும் பாராட்டு!!!
12/03/2025
0
குப்பையில் தெரியாமல் வீசப்பட்ட 25 பவுன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்களுக்கு துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.மதுரை மாநகராட்சியின் 75-வது வார்டு சுந்தர்ராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் தங்கம் (52). விவசாயியான இவர் தனது மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த 25 பவுன் நகையை தான் பயன்படுத்தும் தலையணையின் உள்ளே யாருக்கும்தெரியாமல்பாதுகாப்பாகவைத்திருந்தார். இந்நிலையில் மகள் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், வீட்டை அவரது குடும்பத்தினர் சுத்தம் செய்தனர். அப்போது வீட்டில் உள்ள பழைய பொருட்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. அதில் விவசாயி தங்கம் நகைகளை பாதுகாப்பாக வைத்திருந்த தலையணையும் ஒன்று. அந்த பொருட்கள் அனைத்தும் வீட்டின் முன் போடப்பட்டு, பின்னர் நேற்று காலை அந்த பகுதியில் குப்பைகளை சேகரிக்க வந்த தூய்மைப் பணியாளர்களின் வாகனத்தில் கொட்டி உள்ளனர். அந்த வாகனமும் அங்கிருந்து சென்று விட்டது.இந்நிலையில் 25 பவுன் நகை இருந்த தலையணையும் அந்த குப்பையோடு சென்றதை அறிந்த விவசாயி தங்கம் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் 75-வது வார்டு, தூய்மைப் பணிகள் மேற்பார்வையாளர் மருதுபாண்டியனை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்தார்.இதையடுத்து சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்த தூய்மைப் பணியாளர்களிடம் இது பற்றி தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே சேகரிக்கப்பட்ட குப்பைகளை வெள்ளக்கல் பகுதியில் உள்ள கிடங்கிற்கு கொண்டு செல்லும் பணிகளில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். இந்த தகவல் கிடைத்த உடன், அங்கிருந்த மீனாட்சி என்ற தூய்மைப் பணியாளர், குப்பைகளில் தேடிய போது நகை வைக்கப்பட்டிருந்த தலையணை கிடந்தது. அதனைப் பிரித்துப் பார்த்த போது விவசாயி தங்கம் கூறியபடி, 25 பவுன் நகை இருந்தது தெரிய வந்தது.இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விவசாயி தங்கத்திடம், மேற்பார்வையாளர் மருதுபாண்டியன் மற்றும் தூய்மைப் பணியாளர் மீனாட்சி ஆகியோர் அந்த 25 பவுன் நகைகளை பத்திரமாக ஒப்படைத்தனர். இதனை பெற்றுக் கொண்ட அவர் கண்ணீர் மல்க அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணிகள் மேற்பார்வையாளர் மருதுபாண்டியன் மற்றும் தூய்மைப் பணியாளர் மீனாட்சி ஆகியரை வரவழைத்து மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார். மேலும் பல்வேறு தரப்பிலிருந்து தூய்மைப் பணியாளர் மீனாட்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
