சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியின் 93 வது பிறந்தநாள் வாழ்த்து நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கி.வீரமணிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பெரியாரை இன்று உலகமே கொண்டாடி வருகிறது. குறிப்பாக இன்றைய தலைமுறையான ஜென்ஸி கிட்ஸ் பெரியாரின் கொள்கைகளைப் படித்து அதனை ஏற்க தொடங்கி விட்டார்கள்.இதற்கெல்லாம் காரணம் கி. வீரமணியின் உழைப்பு. பெரியார் தற்போது இருந்திருந்தால் எவ்வாறு நம்மை வழி நடத்தி இருப்பாரோ அந்த இடத்தில் இருந்து வீரமணி நம்மை இன்று வழி நடத்துகிறார். தமிழகத்திற்கு ஹிந்தி திணிப்பு, எஸ்.ஐ.ஆர் போன்ற எந்த ஆபத்து வந்தாலும் அதை நமக்கு முன் கூட்டியே தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக வீரமணி திகழ்கிறார் என்றார்.மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், தினமும் விடுதலை நாளிதழை படித்து விட்டு தான் முரசொலியை நான் படிப்பேன். பெரியாரின் கொள்கை வழியில் கி.வீரமணி வாழ்ந்து வருகிறார். திமுக இளைஞரணி சார்பில் நடத்தப்பட்ட அறிவு திருவிழாவை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த சிலர் முட்டுக்கட்டை போட்டார்கள். ஆனால் அதையும் மீறி வள்ளுவர் கோட்டத்தில் அறிவு திருவிழா நிகழ்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.நமது முதல்வர், பெரியார் வழியில் ஆட்சி செய்து வருகிறார். 'திமுக செல்லும் பாதையை எப்போதும் தீர்மானிப்பது பெரியாரின் கொள்கைகள்' தான் என்று முதல்வர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஆகவே பெரியாரின் கொள்கை பாதையில் தான் திமுக எப்போதும் செல்லும், அதை யாராலும் நிச்சயம் மாற்ற முடியாது.திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெறும் வீரமணி கிடையாது, என்னுடைய கீயாகவும் அவர் தான் உள்ளார் என்று கலைஞர் கூறுவார். தாக்குதல்கள், சிறைவாசங்கள், ஒடுக்குமுறைகள் என எல்லாவற்றையும் நமக்காக தாங்கிக் கொண்ட கி.வீரமணிக்கு நாங்கள் எப்போதும் துணையாக நிற்போம். இது எங்களின் கடமை என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சென்னை அடையாறில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
சென்னை:பெரியாரின் கொள்கைகளை ஜென்ஸி கிட்ஸ் ஏற்க தொடங்கி விட்டனர் உதயநிதி ஸ்டாலின்!!!
12/02/2025
0
