மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் மதுரை நீதிமன்றம் உத்தரவு!!!

sen reporter
0

கார்த்திகை தீபம் திருநாளில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளை (டிச.3) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் வழக்கம் காலங்காலமாக இருந்து வந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் சில ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட நிலையில், அதன்பிறகு மலை மேல் உச்சிப்பிளையார் கோயில் முன்புறம் உள்ள தீபத்தூணில், சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.ஆனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி கேட்டு மதுரை எழுமலையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற எந்த சட்டத் தடையும் இல்லை. ஆனால், கோயில் நிர்வாகம் மலையிலுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்ற முடிவு செய்துள்ளது. இது சட்டவிரோதமானது. இந்த முடிவை மாற்றி மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் நிர்வாகம் சார்பில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு அழைப்பிதழ்கள் அடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டு விட்டது. எனவே, இந்த ஆண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வாதிடப்பட்டது.இதனையடுத்து மனுதாரர் தரப்பில், எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் கோயில் நிர்வாகம் கடந்த பல ஆண்டுகளாக, மோட்ச தீபம் ஏற்றக்கூடிய இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றி வருகின்றனர். மோட்ச தீபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது ஆகம விதிகளுக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டது.பின்னர், தர்கா நிர்வாகம் சார்பில், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. உரிமையியல் வழக்காகத்தான் தாக்கல் செய்ய வேண்டும் என வாதம் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை ஒத்தி வைத்தார். தொடர்ந்து, அரசு மற்றும் தர்கா நிர்வாக வாதங்களின் அடிப்படையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருப்பரங்குன்றம் மலைக்குச் சென்று பார்வையிட்டார்.இந்த நிலையில், இந்த வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், திருக்கார்த்திகை தீபத் திருவிழா நாளில் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம். தீபம் ஏற்றுவதற்கான முழு பாதுகாப்பையும் காவல்துறை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top