சென்னை:அதிமுகவின் ஆளுமை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு தினம் அதிமுகவினர் அஞ்சலி!!!
12/05/2025
0
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 9ஆம்ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவருடைய நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இவருடன் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் சென்று மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரின் நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.அதில், அதிமுக இயக்கம் இருக்கும் வரை, தமிழர்கள் வாழ்வு வளம்பெற செயல்படும். இந்திய அரசியல் வரலாற்றில் ஈடு இணையில்லா அரசியல் தலைவராக திகழ்ந்த ஜெயலலிதா, துரோகிகள் மற்றும் எதிரிகளின் சூழ்ச்சிகளை வேருடன் அழித்து இரும்பு மங்கையாக வலம்வந்தார். தமிழ்நாட்டை பசியில்லா மாநிலமாக உருவாக்கிட அம்மா உணவகம் திறந்தார்.அதிமுக ஆட்சியில், கொள்ளை, கொலை, குடும்ப ஆட்சி போன்றவை இல்லை. அதனால் மக்களின் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை. அத்தகைய நல் ஆட்சியை மீண்டும் அமைக்க ஓய்வின்றி உழைப்போம் உற்சாகமாக உழைப்போம். பொய்யான வாக்குறுதிகளை தந்து, மக்களை ஏமாற்றிய குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப உறுதியேற்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.மேலும், திமுக ஆட்சியின் கொட்டத்தை அடக்க வேண்டும் எனவும், பொம்மை முதல்வரின் பொய் முகத்தை தோலுரித்து காட்டாமல் விடமாட்டோம் என்றும் வாக்குறுதி எடுத்தனர்.முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில், அதிமுக தொண்டர்களின் இதயத் துடிப்பில் அன்றும், இன்றும், என்றும் வாழும் எங்கள் இதய தெய்வம், மக்களால் நான்; மக்களுக்காகவே நான் என தவ வாழ்விற்காக தன்னை அர்ப்பணித்து, ஒவ்வொரு திட்டத்தையும் தாயுள்ளத்தோடு பார்த்து பார்த்து செய்த ஒப்பற்ற தலைவி.நூற்றாண்டு கனவு நோக்கி நம் இயக்கம் பீடுநடை போடுவதற்கு அடித்தளமிட்ட தன்னிகரற்ற ஆளுமை. இன்று வரையிலும், இனியும் எனது ஒவ்வொரு செயலுக்கு பின்னால் இருக்கும் எனது அரசியல் வேத நிலையம். இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மாவை, அவரது 9ஆம் ஆண்டு நினைவு நாளில் போற்றி வணங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
