கன்னியாகுமரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சட்ட விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்படுதல், தொமுச அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களை ஒருமையில் பேசுதல், தொமுச உறுப்பினர்களை மாற்று சங்கத்திற்கு செல்ல
வற்புறுத்துதல், போன்ற அராஜக செயல்களை சில ஊழல் அதிகாரிகளின் துணையுடன் துணிச்சலாக செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
* நிர்வாக உதவியாளர்கள்
ஜாண் றோஸ், ஷீஜூ, வணிக ஆய்வாளர்கள் மணி, சுரேஷ், கணக்கீட்டாய்வாளர்கள் கிறிஸ்டோபர், ஜஸ்டின் ராஜ், சுரேஷ் ராஜன், முகவர்கள் ஜெப செல்வ செல்வகுமார், பொன்ராஜ் போன்றவர்களின் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
* பூதப்பாண்டி இளநிலை உதவியாளர் ரமேஷ்குமாருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
* பார்வதிபுரம் கார்த்திகேயன் மேற்பார்வை பொறியாளருக்கு வேண்டியவர் என்பதால், அவரிடம் இருந்து விருப்ப மாறுதல் விண்ணப்பம் பெற்று அதன் அடிப்படையில் நிர்வாக தரப்பு இடமாறுதல் வழங்கப்பட்டதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
* வாரிய குடியிருப்பில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் குடியிருக்க இயலாத நிலையை பலமுறை சுட்டிக்காட்டியும், தொழிலாளர்களுக்கு உரிய வீட்டு வாடகை படி இதுவரை வழங்கப்படவில்லை.
போன்ற 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தொமுச கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் விஜயகுமார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு மின் துறை அமைச்சர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை பொறியாளர்
போன்ற உயர் அதிகாரிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட மின் பகிர்மான வட்டம் சார்பில் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் புதிய மின்கம்பங்கள் நிறுவுவதற்கும், புதிய டிரான்ஸ் பார்மர் அமைப்பது, பழைய ஒயர்களை மாற்றி புதிய ஒயர்களை இணைப்பது போன்ற பணிகளுக்காக தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்த பின்னரும் சுமார் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு இன்னும் டெண்டர் விடாமல் காலதாமதம் செய்யப்பட்டு வருவதாக திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் கன்னியாகுமரி மின் பகிர்மான மாவட்ட செயலாளரும், மாநில துணைப் பொதுச் செயலாளருமான - விஜயகுமார் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது :
கன்னியாகுமரி மாவட்டத்தில் மின் வாரியம் கடந்த சில ஆண்டுகளாக நலிவுற்று நிலையில் செயல்பட்டு வருகிறது. ஊழியர் பற்றாக்குறை, ஒப்பந்த பணிகளில் சுணக்கம், போன்ற பல்வேறு குறைபாடுகள் இருந்து வந்தன. இந்த நிலையில் தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்ட மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யவும், தேவைக்கேற்ற அழுத்தத்துடன் மின்சாரம் வழங்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒப்பந்த பணிகளுக்கான தொகையை ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் பழைய மின்கம்பங்களை மாற்றி விட்டு புதிய மின்கம்பங்களை நட்டு மின்கம்பிகளை இழுத்து கட்டுவது ட்ரான்ஸ்பார்மர் அமைப்பது, சைஸ் ஆப் கண்டக்டர் சேஞ்ச் எனப்படும் பழைய கம்பி ஒயர்களை மாற்றிவிட்டு புதிய கம்பி ஒயர்களை கட்டுவது போன்ற வகையில் 50 கோடி ரூபாய்கான டெண்டர் இன்னும் விடப்படாமல் உயர் அதிகாரிகள் காலதாமதம் செய்து வருகின்றனர்.
தகுதி இல்லாத நபர்களை வைத்து வீடுகளில் மின் இணைப்பு குறித்து சோதனை நடத்தி அளவுக்கு அதிகமான அபராதங்கள் விதிப்பது, ஊழியர்களின் இடம் மாற்றங்களின் போது விதிகளை கடைபிடிக்காமல் செயல்படுவது போன்ற பல்வேறு பிரச்சினைகளும் மின்வாரியத்தில் நீடித்து வருகின்றன.
இவற்றையெல்லாம் சரி செய்ய மின்துறை அமைச்சருக்கும் வாரிய தலைவருக்கும் கோரிக்கைகள்
விடுத்துள்ளோம். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2000 களப்பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். என்று மின்துறை அமைச்சர் மற்றும் வாரிய தலைவரிடம் வைத்த கோரிக்கை விரைவில் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.
இதேபோன்று கான்ட்ராக்ட் லேபர்களுக்கு ஆன்லைன் மூலமாக சம்பளம் வழங்கும் முறையில் இதுவரை ஏற்பட்ட குறைபாடுகள் இனி வராத அளவிற்கு துறை ரீதியாக நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்கனவே 53 மின் வாரிய அலுவலகங்கள் உள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் உள்ள சப் ஸ்டேஷன்கள் அதிக அளவில் நுகர்வோர்களை கொண்டதால் கூடுதலாக 12 மின்வாரிய அலுவலகங்கள் திறக்கவும், தொழிற்சங்கங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்ததன் பலனாக அது நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர், ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் மாற்றல் விவகாரங்களில் தனிச்சியான போக்கை கடைபிடித்து வருகிறார். தொமுச தொழிற்சங்கத்தின் நியாயமான கோரிக்கைகளை கன்னியாகுமரி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் கண்டு கொள்ளா விட்டால் அடுத்த ( செப்டம்பர்) மாதம் 8ம் தேதி மாலை நாகர்கோவில் மின்வாரிய அலுவலகம் முன் கண்டன கருப்பு கொடி போராட்டம் நடத்தி, தமிழக முதல்வர், அமைச்சர் மற்றும் மின்வாரியத்தின் கவனத்திற்கும் எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்க போராடுவோம் என்று கூறினார்.