இளைஞர்களை அழித்துக் கொண்டிருக்கும் மதுக்கடைகளை மூடிடுக!

sen reporter
0


 வழிகாட்டும் குறள் மணி (42)


"வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் 


வைத்தூறு போலக் கெடும்."(திருக்குறள் 435)


பொருள்:

பெருந்தீங்கு நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை நெருப்பின் முன் நிற்கும் வைக்கோல் போல் அழிந்து விடும்.


விளக்கம்:

தனிமனிதனும் ஆட்சியாளரும் இந்தக் குறள் வெளிப்படுத்தும் 

அறிவுறுத்தல்களை உள்வாங்கி உரிய முறையில் செயல்பட வேண்டும்.


பிற்காலத்தில் சிறப்பாக வாழ, இளமையில் கல்வி கற்க வேண்டும், பாதுகாப்பாக வாழ, வருவாய் ஈட்டும் போதே சேமிக்க வேண்டும், கொடிய நோய்கள் வராமல் காப்பாற்றிக் கொள்ள மது, புகையிலை மற்றும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.இப்படி எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படும்படி தனி மனிதனுக்கு அறிவுறுத்துகிறார், வள்ளுவர்.


இந்த அறிவுரை ஒரு தாய்க்கு ஈடாக உள்ள அரசுக்கும் பொருந்தும்.


தமிழக இளைஞர்களை செல்லெரித்துப் போக வைத்துக் கொண்டிருக்கும் மதுக்கடைகள் மிகப்பெரிய கேட்டை நோக்கி சமூகத்தைக்

கொண்டு செல்கின்றன.


 தமிழக இளைஞர்கள்  மதுக்கடைகளில் வரிசையாக நின்று குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வடநாட்டு இளைஞர்கள் படையெடுத்து இங்கு வந்து இவர்கள் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.


இந்த  மதுக்கடைகளால் இப்போது பெரிய அளவுக்கு வருமானம் வருவதாக தோன்றினாலும் உண்மையில்  இழப்பும் பெரும் சீரழிவுமே ஆகும்.


ஒரு பக்கம் கோடிக் கணக்கில் வருமானம். மறுபக்கம் பல்லாயிரம் இளைஞர்கள் குடி நோயாளிகள், நடைபிணங்கள்.!


இப்படி மதுக்கடைகளை திறந்து வைத்துக் கொண்டு நலத்திட்டங்களை நிறைவேற்றுவது ஓட்டைகள் உள்ள பானையில் நீர் நிரப்புவதற்கு சமமாகும்.


தமிழ்நாட்டில் உள்ள சுமார் 5000 மதுக்கடைகளின் எண்ணிக்கையை  படிப்படியாக  குறைத்து சாமானிய மக்களை, இளைஞர்களை -அடுத்த தலைமுறையை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்!

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top