தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி புதூர் 1வது வார்டு பகுதியில் சாக்கடை தேங்கி பல மாதங்களாகிறது.
பேரூராட்சி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என புதூர் பொதுமக்கள் கண்ணீருடன் புலம்புகின்றனர்.
இதுகுறித்து பலமுறை பேரூராட்சியின் செயல் அலுவலரிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
குறிப்பாக, இப்பகுதியில் குழந்தைகள் பயின்று வரும் பள்ளியும்,ரேஷன் கடையும் உள்ளது.குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர்களும் சாக்கடை தேங்கி நிற்பதை பார்த்து நோய்த்தொற்று ஏற்பட்டுவிடுமோ என பயந்து பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப தயக்கம் காட்டுகின்றனர்.
இதனால் பள்ளிக் குழந்தைகளின் எதிர்கால கனவும் கேள்விக்குறியாக உள்ளது.இதனை தொடர்ந்து தேங்கி நிற்கும் சாக்கடையில் விஷப்பூச்சிகள் வந்து செல்வதாக அருகில் குடியிருக்கும் பொதுமக்கள் பயப்படுகின்றனர்.
தேங்கி நிற்கும் சாக்கடையால் நோய்த்தொற்றோ, விஷப்பூச்சிகளால் ஆபத்தோ ஏற்படும் முன் சாக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் பலமுறை நிர்வாகித்திடம் கூறினாலும், நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என்ற தோரணையில் பேரூராட்சியின் உயர்திரு. செயல்அலுவலர் செயல்பட்டுகொண்டு இருப்பதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டை பொதுமக்கள் கூறிவருகின்றனர்.
உத்தமபாளையம் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செயல் அலுவலர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்?
ஏற்கனவே உத்தமபாளையம் பேரூராட்சியை பொருத்தவரை நிர்வாகம் சரியாக நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களிடம் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் புதூர் பகுதியில் இப்படி ஒரு குற்றச்சாட்டும் வந்துள்ளது.
உத்தமபாளையம் பேரூராட்சியின் செயல் அலுவலர் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசிற்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறாரா? என்பது மக்களின் கேள்வி.
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பார்வை உத்தமபாளையம் பேரூராட்சி பக்கம் திரும்புமா என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.
