திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆவடி வட்டாச்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆவடி, விளிஞ்சியம்பாக்கம், பாரதியார் நகரில் 150ற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் வேட்டைக்காரன் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். இதற்கிடையில் கடந்த ஆண்டு இப்பகுதியில் குடியிருப்போர்களுக்கு நீர்வள ஆதாரத்துறை சார்பில் நீர்நிலைப் பகுதியில் வசிப்பதாக கூறி அறிவிப்பு வழங்கி வீடுகளை காலி செய்ய கூறியுள்ளனர்.
இதையடுத்து, குடியிருப்போர் தாங்கள் பட்டா நிலங்களில் தான் குடியிருக்கிறோம் என தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அவர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும் மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 10ம் தேதி நீர்வள ஆதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து, நீர்நிலை பகுதியில் இருப்பதாக கூறி, பாரதிதாசன் நகரில் 18 கட்டங்களை (கடைகள்) பொக்லைன் மூலம் இடித்துள்ளனர்.
அப்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து குடியிருப்புகளை இடிக்காமல் அதிகாரிகள் சென்றனர். இந்த நிலையில் இன்று தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பாரதிதாசன் நகரில் வீடுகளை இடிப்பதை தடுத்து நிறுத்த கோரி, ஆவடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாநிலச்செயலர் இ.கங்காதுரை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு, வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வீடுகளை இடிக்க கூடாது என கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கலந்து கொண்டது.
நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநிலத்தலைவர் பி.டில்லிபாபு, துணைத்தலைவர் ஏ.வி.சண்முகம், துணை செயலர் ஆர்.தமிழரசு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
நிறைவில் குடியிருப்போர் சார்பில் ஆவடி வட்டாச்சியர் விஜயகுமாரை சந்தித்து வீடுகளை இடிக்கக் கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர்.
நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன், ஆவடி பகுதிச்செயலர் ஏ.ஜான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவடி பகுதிச்செயலர் எஸ்.மயில்வாகனம், மாதர் சங்கச்செயலர் லதா மற்றும் பழங்குடி முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.