திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நடிகர் விஜய், பாளையங்கோட்டையில் நிவாரண உதவிகளை வழங்கினார்.
கடந்த 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழை, அப்பகுதிகளை புரட்டிப் போட்டது.
வெள்ள பாதிப்பில் இருந்து, அந்த மாவட்டங்கள் மெல்ல மீண்டு வரும் நிலையில், அந்த மக்களுக்கு பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்களுக்கு, அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கினார்.
வீடுகளை இழந்தவர்களுக்கு 25,000 ரூபாய் நிதி உதவி
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட மொத்தம் 1,500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்க உள்ளார்.
இதற்காக, தூத்துக்குடியில் இருந்து 400 நபர்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் நெல்லைக்கு அழைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மின்சாரம் தாக்கி உயிரிழந்த ராபின்சன் என்பவரது குடும்பத்திற்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதியையும் விஜய் வழங்குகிறார்.
மேலும் கனமழையால் வீடுகளை இழந்தவர்களுக்கு, 25,000 நிவாரண உதவியும் நடிகர் விஜய் வழங்குவார் என விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் நெல்லை வந்ததை அறிந்து, விழா நடைபெறும் மண்டபத்தை சுற்றி ஏராளமான ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக குவிந்துள்ளனர்.



