சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையில் உள்ள ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் இருந்து பெட்ரோலியம், எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் வெடித்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர். பாய்லர் வெடித்த பகுதியில் 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில், பாய்லருக்கு அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாய்லர் வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் சரவணன், பெருமாள் உள்ளிட்ட 4 ஊழியர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் கரிமேடு பகுதியைச் சேர்ந்த பெருமாள், படுகாயமடைந்திருந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்ற மூவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாய்லர் வெடித்தபோது ஏற்பட்ட பலத்த சத்தத்தால், ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்து வெளியே ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு படையினரும் உடனடியாக அங்கு வந்து, மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் உர ஆலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் அம்மோனியா வாயு வெளியேறியது. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது எண்ணூர் சிபிசிஎல் ஆலையில் இருந்து எண்ணெய் கழிவு கொசஸ்தலை ஆற்றில் கலந்து, கடலில் பரவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலில் கலந்த எண்ணெய் கழிவுகள் ஒரு வாரத்திற்கும் மேலாக அள்ளப்பட்டு வருகிறது.
இப்படியாக, வடசென்னை பகுதியில் உள்ள ஆலைகளில் கடந்த சில நாட்களாக நிகழ்ந்து வரும் எண்ணெய் கசிவு, வாயு கசிவு, பாய்லர் வெடித்து விபத்து போன்ற சம்பவங்களால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
