திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் தொடர்பாகப் பெரியாரின் கருத்தை மேற்கொள் காட்டிய பேச்சு மாநிலங்களவை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டெல்லி: ஜம்மு-காஷ்மீா் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் திமுக உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, பெரியாரின் கருத்தைக் குறிப்பிட்டு தனி மனித சுதந்திரம் குறித்துப் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட பாஜக உறுப்பினர்கள், திமுக எம்பியின் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர், அப்துல்லாவின் கருத்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக மாநிலங்களவை சபாநாயகர் ஜகதீப்தன்கர் அறிவித்தார்.
முன்னதாக, இடையில் எழுந்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சுக்கு திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கிறதா?
என கேள்வி எழுப்பினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திமுக உறுப்பினர் அப்துல்லாவின் பேச்சு அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டுமா? என அவைத் தலைவர் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறினார்.
பின்னர் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பெரியார் கூறியதை எம்பி அப்துல்லா இங்குத் தெரிவித்துள்ளார். அதற்கு ஆதரவு தெரிவிப்பதா? இல்லையா என்பதை விவாதித்து முடிவு செய்வோம், ஆனால் அவரை பேசவே விடாமல் குறுக்கிடுவது ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் கருத்து என தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மாநிலங்களவை பெரியார் குறித்த பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ள விவகாரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், "மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்., அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய பெரியாரின் மேற்கோளுக்கு பாஜகவினா் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது.மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமா் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில், பெரியாா் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்.
மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்பு வாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் பெரியாரின் பெயரை எங்கும் - எப்போதும், எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம்" இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் பேசிய முழு வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் எம்.எம்.அப்துல்லா பதிவிட்டுள்ள நிலையில், பலரும் அதனை ஷேர் செய்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
