புயல், மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் திரு.சாத்தூர் ராமச்சந்திரன் அவர்கள் சென்னையில் கூறினார்.
வங்கக்கடல் பகுதியில் உருவாகும் புயல் சின்னத்தால் ஏற்படும் கனமழை எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார்.
பின்னர் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்நோக்கி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான அறிவுரைகளை வழங்கி உள்ளார். அதனடிப்படையில், மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட்டு வருகிறது. காணொலி காட்சி மூலம் நடத்தப்பட்ட ஆய்வுக்கூட்டத்தில் 12 மாவட்ட கலெக்டர்களுக்கு தகுந்த அறிவுரையை முதல்-அமைச்சர் வழங்கி உள்ளார். அதேபோல், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தனியாக ஆய்வு கூட்டம் நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதே அறிவுரை வழங்கியுள்ளார்.
புயல், மழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. நாம் எதிர்பார்த்தது போல், புயல் சென்னைக்கு வராமல் ஆந்திராவிற்கு செல்வதால் புயலின் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது. ஆனால் கனமழையும் காற்றும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க கடலோர மாவட்டங்களில் உள்ள கலெக்டர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டிய பணிகளையும் மரங்கள் கீழே விழுந்தால் அதை எல்லாம் உடனே அப்புறப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபடவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
தேசிய பேரிடர் மீட்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் 450 பேர் தயார் நிலையில் உள்ளனர்.
புயல் பாதிப்பு ஏற்படும் மாவட்டங்களில் நிவாரண பணிகளில் ஈடுபடுவதற்காக, பாதிக்கப்படாத மாவட்டங்களில் இருந்து மீட்பு படையினரை வரவழைத்து பணியில் ஈடுபடுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
முறையாக பொதுமக்களுக்கு அறிவித்த பின்னரே, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய பாதிப்பு வர வாய்ப்பில்லை. வந்தால் அதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க, மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் 162 முகாம்கள் தயாராக உள்ளன.
தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் இடத்தில் பள்ளிகள், கல்யாண மண்டபங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் தயாராக உள்ளன.
பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான போர்வை, உணவு, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. இதுவரை 5 பேர் உயிரிழந்து உள்ளனர். 98 கால்நடைகளும் இறந்துள்ளன. 420 குடிசை வீடுகள் இடிந்துள்ளது. மனித இழப்புக்கு ரூ.4 லட்சத்தை முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்குகிறோம். கால்நடைகளுக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இடிந்த குடிசை வீடுகளுக்கு ரூ.5 ஆயிரம் போன்றவற்றை உடனடியாக வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். புயல் பாதிப்புகளை தடுக்கும் வகையில் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எந்தவித பாதிப்பும் நிச்சயம் வராது.இவ்வாறு அவர் கூறினார்.உடன், வருவாய் நிர்வாக கமிஷனர் எஸ்.கே.பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர் வே.ராஜாராமன், இயக்குனர் சி.அ.ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
