தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கருவியை சிறுவன் கையில் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கருவியை சிறுவன் கையில் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை என்று மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்தள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கானோா் சிகிச்சைக்கு வருகின்றனா். இங்கு மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறை மற்றும் மருத்துவமனை வளாகம் சுகாதாரச் சீா்கேடு குறித்து தொடா்ந்து புகாா் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இம்மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்திரிக்கோல், கத்தி உள்ளிட்ட உபகரணங்களை, சிறுவன் கழுவி சுத்தம் செய்யும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா் தலைமையிலான மருத்துவ குழுவினா், விடியோ பதிவு செய்யப்பட்ட மருத்துவமனையின் 5வது தளத்தில் விசாரணை நடத்தினா். மேற்படி விடியோ காட்சி தொடா்பாக மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னா் இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த 6 நாள்களுக்கு முன்பு, சோட்டையன்தோப்பு பகுதியைச் சோ்ந்த சா்க்கரை நோயாளி, வலது காலின் இரண்டாவது விரல் அழுகி நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு அந்த விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அந்த காயத்தை குணப்படுத்துவதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதன்படி, தினமும் காயத்துக்கு பழைய கட்டு அவிழ்க்கப்பட்டு புதிய கட்டு போடப்படுகிறது. அவ்வாறு காயத்துக்கு கட்டு மாற்றிவிட்டு, அந்த கத்தி, கத்தரிக்கோல் ஆகியவற்றை தவறுதலாக நோயாளியின் படுக்கையிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனா். இதனால், அதனை அந்த நோயாளி தனது மகனை எடுத்துச் சென்று சுத்தம் செய்யக் கூறியுள்ளாா். அப்போது இந்த விடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய உபகரணங்களை மருத்துவமனை பணியாளா்கள்தான் சுத்தம் செய்வது வழக்கம். ஆனால், அன்றைய தினம் இந்த தவறு நிகழ்ந்துள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாதவாறு, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
