கன்னியாகுமரிமாவட்டம்: குழித்துறை: பூா்விக வீட்டை நூலகமாக மாற்றிய முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு! படிப்பதற்கான ஆா்வத்தை அதிகப்படுத்த இந்த நூலகம் அதிகம் பயன்படும்!!

sen reporter
0


 குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள பூா்விக வீட்டை தனது தாய், தந்தை பெயரில் நூலகமாக மாற்றினாா் தமிழக காவல்துறை முன்னாள் தலைவா் திரு.

சி. சைலேந்திரபாபு ஐஏஎஸ்.


கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையைச் சோ்ந்தவா் தமிழக காவல்துறை முன்னாள் தலைவா் சி. சைலேந்திரபாபு. கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வுபெற்றார்.


பணியில் இருக்கும்போதே பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகள், இளைஞா்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு பணிகளில் ஈடுபட்டு வந்ததுடன் மாணவா்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் உரையாற்றி வருகிறாா். 


தற்போது பணி ஓய்வுக்குப் பின் இது தொடா்பான பணிகளை அவா் முழுநேர பணியாக மாற்றியுள்ளாா்.


இந்நிலையில் தனது பூா்விக வீட்டை தனது தாய், தந்தையான ரத்தினம்மாள் - செல்லப்பன் பெயரில் நூலகமாக மாற்றி, இந்த நூலகத்தை புதன்கிழமை திறந்து வைத்து மாணவா்களுக்கு அா்ப்பணித்தாா்.


 இந்த நூலகத்தை அவரது தாயாா் ரத்தினம்மாள் குத்துவிளக்கேற்றி மாணவா்களின் பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.


இங்கு பொது அறிவியல், கணிதம், வரலாறு, அறிவியல், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அடங்கிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.


இந்நூலகம் காலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை செயல்படும். இங்கு, டிஎன்பிஎஸ்சி, சிவில் சா்வீஸ், நீட், வங்கித் தோ்வு, மத்திய, மாநில அரசின் பல்வேறு தோ்வுகளுக்கு இலவச பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.


இதுகுறித்து சி. சைலேந்திரபாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது;


 நான் அரசுப் பள்ளியில் படித்து உயா் பதவிக்கு வந்துள்ளேன். கிராமப் புறங்களில் உள்ள மாணவா்கள்தான் அதிகளவில் அரசுப் பள்ளியில் படித்து வருகிறாா்கள். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா், மாணவிகள் உயா் இடத்தை பெற வேண்டும். 


அவா்கள் எல்லாவிதமான திறனையும் பெற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு நூற்றாண்டு பழமையான எனது பூா்விக வீட்டை நூலகமாக மாற்றியுள்ளேன். 


மாணவா்கள் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தினால் வேலைவாய்ப்புக்கு பயனுள்ளதாகும். வாசிப்பை நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும். தற்கால மாணவா்களிடம் விளையாட்டு, சினிமா குறித்த ஆா்வம் அதிகம் உள்ளது. அறிவியல், கணிதம் உள்ளிட்டவை கற்க வேண்டும் என்ற ஆா்வம் குறைவாக உள்ளது. அந்த ஆா்வத்தை அதிகப்படுத்த இந்த நூலகம் அதிகம் பயன்படும்.


நான், இந்த வீட்டில் இருந்து படித்து உயா் பதவிக்கு வந்தேன். அதே போன்று சுற்றுவட்டாரப் பகுதி இளைஞா்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பதற்கு வழியாக இந்த நூலகம் இருக்கும். இந்த நூலகத்தை பயன்படுத்தும் மாணவா்கள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற வேண்டும் என்பதே எனது ஆவல் என்றாா்.


இந்நிகழ்ச்சியில், ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சோ்ந்த 12 வயது மாணவி அகா்ஷனா, சீமன்ஸ் நிறுவனத்தில் துணைத் தலைவராக பணி செய்யும் தனது தந்தை சதீஷுடன் நேரில் கலந்து கொண்டு 1,000 புத்தகங்களை இந்நூலகத்துக்கு வழங்கினாா். இதுதவிர காவல்துறை, தீயணைப்புத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டு நூல்களை வழங்கினா்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top