முன்பே மழை வெள்ளங்களை கணிக்கும் விதைப்பூச்சி (Nysivs)! சிறப்பு பார்வையில்: மனிதர்கள் இயற்கையை விட்டு வெகு தொலைவு விலகிவிட்டனர்!

sen reporter
0


மனிதர்கள் இயற்கையை விட்டு விலகி இருப்பதால், பருவகால இன்னலுக்கு உள்ளாகி தேடி சேர்த்த எல்லாவற்றையும் இழந்து கொண்டே இருக்கிறார்கள்.


*இயற்கையை ஏற்க மறுக்கிறார்களா?

*இல்லை இது உண்மையில்லை என மறுக்கிறார்களா?


நெல்லை, தூத்துக்குடியில் பெரும் வெள்ளம் வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வீட்டின் மொட்டை மாடியில்  உயரமான சுவர்களில் இடம் பிடித்துக்கொண்டன இப்பூச்சிகள். 


இதுவரை பார்த்திடாத இப்பூச்சிகளின்  வருகையால் திகைத்துப்போனவர்கள் இதனை விரட்ட படாதபாடு பட்டும் பயனில்லை! ஊர்ந்தும், பறந்தும் சுவர்களின் விளிம்புகளில் புகலிடம் தேடிக்கொண்டன.

இரண்டு நாட்களுக்குப் பிறகு 

இப்பூச்சிகளில் எந்த அளவு உயரத்தில் இருந்ததோ,அதன் உயரத்திற்கு ஓரடி கீழே மழைநீர் வந்தது.


நெல்லை, தூத்துக்குடியில் வழக்கத்திற்கு மாறாக வானிலை கணிப்புகளைக்கடந்தும் கனமழை பெய்யுமென்றும், பெரும் வெள்ளம் சூழும் என்றும் இப்பூச்சிகள் இரண்டு நாட்களுக்கு முன்னமே உணர்ந்துள்ளன.



2004- ஆழிப்பேரலை வந்த போது அந்தமானில் வாழும் பழங்குடிகள் ஆற்றிலிருந்து நீர்ப்பூச்சிகள் இரண்டு நாட்களுக்கு முன்பே கரையேறுவதைக் கண்டு  தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு பூச்சிகளைப் பின் தொடர்ந்து மேடான பகுதியில் தங்கிக் கொண்டார்கள்!  மறுநாள் வந்த  ஆழிப்பேரலையில் முன்பு இருந்த இடங்கள்  முற்றிலும் அழிந்து போயின. 


சென்றவாரம் " காடறிதல் " பயணத்தில் காட்டாற்றில் குளித்துக்கொண்டிருக்கையில் தெளிந்த நீர் கொஞ்சம் கொஞ்சமாக கலங்கி வருவதையும், இலைகளும், சருகுகளும் அதிக அளவில் மிதந்து வருவதையும் அவதானித்து பத்து நிமிடங்களில் கரையேறி விட்டோம்.


பிறகு, காட்டாற்றில் கரைமீறும் வெள்ளம்.முப்பது, நாற்பது கி.மீ. தொலைவிலுள்ள ஏதோவொரு சோலைக்காட்டில் பெய்யும் மழைநீர் இப்படி சில எச்சரிக்கைளுடன் ஓடைகளில், காட்டாறுகளில் பெருக்கெடுக்கும் என்பதை பயண வழிகாட்டிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.


மண்ணடியில் வாழும் சிற்றுயிர்கள் பேரிடர்கள் வரும் முன் அதனை உணரும் ஆற்றலை இயற்கையாகவே பெற்றுள்ளன. அத்தகைய சிற்றுயிர்களின் ஒன்றாக இப்பூச்சிகளும் இருக்கலாம்.


இப்பூச்சிகளை அறிந்து கொள்ளும் பொருட்டு உயிரியலாளர்கள் மதிவாணன், மாணிக்கம் போன்றவர்களிடம் உரையாடுகையில் இப்பூச்சிகளை ஓரளவு அடையாளம் காண முடிந்தது.


பூச்சிகளைப்பற்றிய வாழ்வியல் மற்றும் அறிவியல் தரவுகளை அலசுகையில் .. இப்பூச்சிகளின் பெயர் விதைப்பூச்சி (Nysivs)  

என தெரிய வந்தது. உலகெங்கும் சுமார் 710- வகையில் இப்பூச்சிகள் இருப்பதால் தனித்து இனம் காண்பது அவ்வளவு எளிதன்று. இதன் உள்ளினமான செந்நிற பருத்திப்பூச்சியை (Red Cotton Bug)  எனது வீட்டருகில் பலமுறை பார்த்துள்ளேன்! முதுகுப்பகுதியில் தடித்த செந்நிற இறகுகளின் மீது மூன்று கரும் புள்ளிகள் இருந்தன.மேலுள்ள புள்ளி முக்கோண வடிவிலும், கீழ் உள்ள இரண்டு புள்ளிகள் வட்டமாகவும் உள்ளன.


ஆனால்,

விதைப்பூச்சிகள் முற்றிலும் அடர் பழுப்பு நிறத்தில் உள்ளன.


வயல்வெளிப் புதர்களில், காய்ந்த இலைகளின் அடியில் விதைப்பூச்சிகள் வாழ்கின்றன! பருத்தி - சோளம் போன்ற தாவரத்தண்டுகளைத் துளையிட்டு சாறினை உண்கின்றன. இப்பூச்சிகளை  சாறுண்ணி எனக்கொள்ளலாம்!


ஆண்டிற்கு ஐந்து முறை இனப்பெருக்கம் செய்து. முட்டைகளை மண்ணடியில் இடுகின்றன. படிநிலை வளர்ச்சியில் முட்டைகள் பொரித்து புழுவாகாமல் குட்டிக்குட்டி பூச்சிகளாகவே வெளிப்படுகின்றன.


ஊர்வன, பறவை, மனிதன் போன்ற எதிரிகள் இப்பூச்சிகளை நெருங்கினால், சகிக்க முடியாத துர்நாற்றம் வீசும் ஒருவித திரவத்தை கசிந்து விடுகின்றன.


ஒவ்வொரு மழைப்பொழிவின் போதும் இவை மண்ணடியில் இருப்பதில்லை! இரண்டடி உயரத்திற்கு ஏதேனும் ஒன்றை பற்றிக்கொள்கின்றன.


இந்த முறைதான் நெல்லை, தூத்துக்குடியில் பத்தடிக்கும் மேலான சுவர்களில் ஏறியுள்ளன.


களைக்கொல்லி அடிக்கும் விளை நிலங்களில் இருந்து சடுதியில் இடம் பெயரும் ஆற்றல் இப்பூச்சிகளுக்கு இருப்பதால்,உயிர்க்கொல்லிகளிடம் இருந்து இதுவரை தப்பிப் பிழைத்துள்ளன.


இயற்கையின் போக்கை முன்பே உணர்ந்த பூச்சிகள், ஊர்வன, விலங்குகள், பறவைகள் பேரிடர்களிலிருந்து தப்பித்து கொள்கின்றன.


 மனிதர்கள் இயற்கையை விட்டு வெகு தொலைவு விலகி இருப்பதால், பருவகால இன்னலுக்கு உள்ளாகி தேடித் தேடி சேர்த்த எல்லாவற்றையும் இழந்து கொண்டே இருக்கிறார்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top