தென்மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த தொடர் கன மழை காரணமாக பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஆற்றங்கரை கிராமத்தில், அமைந்துள்ள வைப்பாற்று தடுப்பணை பகுதிகள் மற்றும் கரையோர பகுதிகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.
இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டப்பின் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்திற்கு பெரிதும் பயன்படும் வைப்பாற்றின் கரைப்பகுதியை முதலில் சரி செய்யாமல் தடுப்பணைப் பகுதிகளை சரி செய்ய உத்தவிட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனால் இந்த வைப்பாற்றின் பாதையை பயன்படுத்தி பள்ளிக்கு சென்று வந்த ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்த 50ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆற்றுக்கரையில் ஏறி செல்வதற்கு முடியாத சூழல் நிலவி வருவதால், தங்கள் கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் பள்ளிக்கு சென்று வந்த மாணவர்கள் தற்போது 25 கிலோமீட்டர் தூரம் சுற்றி விளாத்திகுளம் சென்று அங்கிருந்து பேரிலோவன்பட்டியில் உள்ள பள்ளிக்கு செல்லக்கூடிய சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் அவசர மருத்துவ உதவிக்கு இந்த வைப்பாற்றின் பாதையை பயன்படுத்தியே பேரிலோவன்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருவது வழக்கம்.
தற்போது பொதுமக்கள் சென்று வருவதற்கேற்ப கரைப்பகுதியை செய்யாததால் கடந்த சில தினங்களாக பெரிதும் அவதிப்பட்டு வருவதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.இது ஒரு புறம் இருக்க,
அங்குள்ள வைப்பாற்றின் தடுப்பணைக்கு அருகில் உள்ள பகுதிகளை சரி செய்வதில் ஹிட்டாச்சி, ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி ஆற்றிலியே மணலை எடுத்து ஏராளமான டிப்பர் வாகனங்கள் மூலம் தடுப்பணியை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஆனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்திற்கு அத்தியாவசியமாக விளங்கும் ஆற்றங்கரை - சிங்கிலிபட்டி வைப்பாற்றுப் பாதையின் கரையோரத்தில் அடித்துச் செல்லப்பட்ட கரை பகுதிகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பது ஆற்றங்கரை கிராம மக்களுக்கு பெரிதும் மனஉளைச்சலையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தடுப்பணையை சரி செய்யும் அதிகாரிகளிடம் தங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பலமுறை முறையிட்டும் சரி செய்ய நடவடிக்கை எடுத்த பாடில்லை என ஆதங்கத்துடன் கிராமமக்கள் கூறுகின்றனர்.
எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி உடனடியாக ஆற்றங்கரை - சிங்கிலிபட்டி வைப்பாற்றுப் பாதையை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொது மக்கள் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


