ஸ்ரீவைகுண்டத்தில் பதினாறு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள செந்தூர் எக்ஸ்பிரஸ் வரும் ஆறாம் தேதி முதல் இயக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் கரையோரம் இருந்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் தான் கடந்த டிசம்பர் 17ம் தேதி இரவு 8.30 மணி அளவில் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் 820 பயணிகளுடன் கிளம்பியது. இரவு 9 மணி அளவில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு வந்தபோது பல்வேறு இடங்களில் மழை வெள்ளத்தால் ரயில் தண்டவாளங்கள் சேதமடைந்தது.
இதனால் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக ரயிலில் பயணம் செய்த 820 பயனாளிகளும் பெரிதும் அவதி அடைந்தனர். அவர்களை மீட்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்பட்டனர். தற்போது திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் முதல்கட்டமாக திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வரையிலான ரயில் தண்டவாளங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டது.
முதல் கட்டமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மழையில் சிக்கியிருந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மீட்க ரயில்வே துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் காரணமாக காலை 11 மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து டீசல் எஞ்சின் வரை கொண்டுவரப்பட்டது.
அதை செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சினில் ரயில்வே ஊழியர்கள் பொறுத்தினர். அதை தொடர்ந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொறுத்தப்பட்டிருந்த 22 பெட்டிகளின் தற்போதைய நிலை குறித்தும், பெட்டிக்குள் யாரும் இருக்கிறார்களா என்பது குறித்து அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னர் மதியம் சுமார் 1.30 மணி அளவில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து டீசல் எஞ்சின் மூலம் மீட்கப்பட்டது. இந்த ரயில் திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முழுமையான பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் தான் பயணம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில்வே தண்டவாளத்தில் ஆழ்வார்திருநகரி பகுதியில் தண்டவாளம் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே ரயில்வேத்துறை திருநெல்வேலி திருச்செந்தூர் இடையே ஜனவரி 5ஆம் தேதி வரை ரயில் ரத்து என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வருகிற 5ம் தேதிக்குள் இந்த பணிகள் முடிவடைந்து விடும் அதன் பின்னர் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.
