தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில், ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளர்.
தென் மாவட்டங்களில் டிசம்பர் 30, 31ம் தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. ஆனால், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ததே தவிர சொல்லும்படியாக எங்கும் கனமழை இல்லை.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலும் மேக மூட்டமும் வெயிலும் மாறி மாறி இருந்ததே தவிர மழை பெரிதாக இல்லை. தற்போது அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறும் என்றும் நேற்று முன்தினம் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதேபோல் நேற்று செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என எச்சரித்து இருந்தது.
இதனிடையே, இன்று பிரபல தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் பரபரப்பு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது;
தென் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. ஆனால் உண்மையில் ஒரு சொட்டு மழை கூட இல்லை.
சமீபத்திய தாக்கத்திற்கு பிறகு இதே டிரெண்ட் நீடித்தால் உண்மையாகவே கனமழை பெய்யும் போது மக்கள் இந்த வானிலை எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
அதோடு புலி வருது.. புலி வருது.. என தினமும் அச்சுறுத்தி விட்டு ஒருநாள் உண்மையாகவே புலி வரும் போது எச்சரிக்கும் நபரை.. ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற கதையை சுட்டிக்காட்டும் வகையில் போட்டோ ஒன்றையும் வெதர்மேன் தனது பதிவில் கூறியுள்ளார்.
அடுத்த 4 முதல்5 நாட்களுக்கு;
வெதர்மேனின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு வெதர் மேன் கொடுத்த வானிலை முன்னறிவிப்பில், தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழையோ.. கனமழைக்கோ எதிர்பார்க்க முடியாது. ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்யும். எனவே அடுத்த
4 முதல்5 நாட்களுக்கு வானிலை முன்னறிவிப்பு பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை.
உங்கள் வழக்கமான பணிகளை செய்து கொண்டே புத்தாண்டில் அடியெடுத்து வையுங்கள். கருமையான மேகங்களை கண்டோ லேசான மழைத்துளிகளை கொண்டோ நெல்லை, தூத்துக்குடி மக்கள் அச்சப்பட வேண்டாம்.
சென்னை, நெல்லை, தூத்துக்குடிக்கு இந்த ஆண்டு கொஞ்சம் கடினமானதாக இருந்தது. தேவை இல்லாத நேரத்தில் மக்கள் வானிலை பற்றிய அச்சத்துடன் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜனவரி முதல் வாரம் முடியும் நேரத்திலும் இரண்டாவது வாரத்திலும் தான் தமிழ்நாட்டில் மழையை எதிர்பார்க்கலாம்" என்று கூறியிருக்கிறார்.
