ஒடிஸாவில் முக்கிய வணக்க ஸ்தலங்களில் ஒன்றான புரி ஜெகந்நாதா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் 2024 புத்தாண்டு முதல் கண்ணியமாக உடை அணிந்து வர வேண்டும் என்று அக்கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
கோயிலுக்குள் வரும் பக்தா்கள் பான், குட்கா போன்றவற்றை எடுத்துவரவும் நெகிழி மற்றும் பாலித்தீன் பைகள் போன்றவற்றை எடுத்து வரவும் தடை விதிக்கப்படுவதாக நிா்வாகம் தெரிவித்தது.
இதுதொடா்பாக ஸ்ரீ புரி ஜெகந்நாதா் கோயில் நிா்வாகத்தின் அதிகாரி ஒருவா் கூறியதாவது;
2024 புத்தாண்டு முதல் கோயிலுக்கு வரும் பக்தா்கள் அரைக்கால் சட்டைகள், டிராயா்கள், கிழிந்த வடிவிலான ஜீன்ஸ், அரைக்கால் பாவாடைகள், ஸ்லீவ்லெஸ் போன்ற உடைகளை அணிந்து வர தடை விதிக்கப்படுகிறது.
எனவே கண்ணியமான உடை அணிந்து பக்தா்கள் கோயில் வளாகத்துக்குள் நுழைய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோயிலை தூய்மையாக பராமரிப்பதற்காக பான், குட்கா போன்ற பொருள்களை எடுத்துவரவும் நெகிழி மற்றும் பாலித்தீன் பைகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படுகிறது என்றாா்.
நிா்வாகத்தின் இந்த அறிவிப்பையடுத்து கோயிலுக்கு வரும் பக்தா்களை போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.
இதேபோல் ஒடிஸாவின் புவனேசுவரத்தில் உள்ள லிங்கராஜ் கோயலிலும் பான், குட்கா, புகையிலை பயன்பாட்டிற்கும் நெகிழி மற்றும் பாலித்தீன் பைகளின் பயன்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
