தொடர் மழை காரணமாக பொன்னை ஆற்றில் நீர்வரத்து தொடக்கம்!
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பொன்னை வள்ளிமலை சுற்றுப்புற கிராமப் பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் வள்ளிமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. இதே போல் தமிழ்நாடு மற்றும் ஆந்திர எல்லை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வறண்டு கிடந்த பொன்னை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு முதல் நீர்வரத்து வர தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பொன்னை ஆற்றின் அணைக்கட்டு பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணறுகளின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.