வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வருவதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்யுமாறு காட்பாடி காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். இதையடுத்து (பொறுப்பு) துணை காவல் கண்காணிப்பாளர் இருதயராஜ் உத்தரவின் பேரில், கஞ்சா விற்பனை செய்பவர்களை காட்பாடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த (22:08:2024) அன்று காலை 7:00 மணி அளவில் காட்பாடி தாராபடவேடு குளக்கரை தெருவைச் சேர்ந்த ராஜா மகன் காமேஷ் (19) என்பவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது காமேஷ் காவல் நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பி ஓடிவிட்டார். உடனே வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரண்டு தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த (23:08:2024) அன்று இரவு 11:00 மணியளவில் காட்பாடி மூலக்கசம் தேவலாய்ஸ்சு பள்ளி அருகில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான தனிப்படை போலீசார் விரைந்து சென்று குறிப்பிட்ட இடத்தில் பார்த்தபோது 4 பேரும் பதுங்கி இருந்ததை கண்டறிந்தனர். இதைதொடர்ந்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து அவர்களை காட்பாடி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையின் போது காட்பாடி தாராபடவேடு குளக்கரை தெருவைச் சேர்ந்த ராஜா மகன் காமேஷ் (19), காட்பாடி விஐடி பின்புறம் உள்ள கன்னிகோவில் தெருவைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் அருண் (21), காட்பாடி பள்ளிக்குப்பம் குளக்கரை பகுதியைச் சேர்ந்த பிச்சாண்டி மகன் தினேஷ் (19), விஐடி பின்புறம் உள்ள கன்னிகோவில் தெருவைச் சேர்ந்த விஜி மகன் மாதவன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரிடமும் இருந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து அவர்கள் நால்வர் மீதும் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி உந்தவின்பேரில் சேலம் மத்திய சிறையில் நால்வரும் காவலில் அடைக்கப்பட்டனர் .
இதில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காட்பாடி காவல் நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பி ஓடிய நபரை காட்பாடி காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி 4 பேருடன் அதிரடியாக கைது செய்தது குறிப்பிடதக்கது. இவர்களின் பைக் மற்றும் 3 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.
