கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்க்கும் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கும் சில ஆண்டுகள் பனிப்போர் நிலவி வந்தது. இளைஞர் அணியில் துணை செயலாளராக இருந்த மகேஷ் திருச்சி மாவட்ட செயலாளராக பதவி உயர்வு பெற்ற போதே மறைமுக மோதல் தொடங்கியது. 2021 சட்டமன்ற தேர்தல் முடிந்து மகேஷை அமைச்சராக்கிய போது ராஜாவால் பொறுத்து கொள்ள முடியவில்லை. மூன்று முறை சட்டமன்ற உறுப்பினரான தன்னை அமைச்சராக்காமல் மகேஷை அமைச்சராக்கியுள்ளார்கள் என்று தனக்கு நெருங்கிய வட்டங்களிடம் ஆதங்கத்தை வெளியிட்டு வந்தார். போதாக்குறைக்கு தஞ்சாவூருக்கு மகேஷை பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட போது ராஜாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
மகேஷுடன் திருவாரூர் மாவட்ட செயலாளர் கலைவாணன் நெருக்கம் காட்டியது ராஜாவுக்கு மேலும் கோபமூட்டியது. இந்நிலையில் தனது தந்தை பாலுவிடம் தனக்கும் அமைச்சர் பொறுப்பு வாங்கி தர வேண்டும் என்று மன்றாடி தொழில்துறை அமைச்சர் பதவியை வாங்கி விட்டார். அப்படி இருந்தும் மற்ற அமைச்சர்களிடம் மகேஷ்க்கு இருக்கும் மரியாதை தனக்கு இல்லை என்பதை வருத்தமாக தெரிவித்து வந்தார். கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக பெரு வெற்றியை பெற்றவுடன் தலைமையிடம் தனக்கு செல்வாக்கு கூடிவிட்டது என்று மகிழ்ச்சியும் பெருமிதமாகவும் இருந்தார். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜிக்கு எல்லாம் அந்த வெற்றியில் பங்கில்லை என்பதை தனக்கு நெருங்கிய வட்டங்களிடம் தெரிவித்து வந்தார்.
அப்படி இருந்தும் மகேஷை மீறி தலைமையிடம் செல்வாக்கு பெற முடியவில்லை இது குறித்து தனக்கு வேண்டியவர்களிடம் பேசி வியூகம் வகுக்க தொடங்கினார். அதன் விளைவாக தன்னுடைய சமூகமான அகமுடையார் அரசியலை கையில் எடுக்க முடிவு செய்தார். அகமுடையார் அரசியலை கையில் எடுத்தால் மகேஷால் எதுவும் செய்ய முடியாது. தலைமையிடம் செல்வாக்கும் கூடும் என்று ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். அதன் முதல் கட்டமாக மதுரையில் உள்ள மாமன்ற உறுப்பினர் மாரநாடு மகன் காதுகுத்துக்கு வந்து கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார் ராஜா. பொதுவாக கட்சிக்காரர்கள் வீட்டு கல்யாணம் விசேசம் என்றால் தான் தங்கள் மாவட்டம் விட்டு வேறு மாவட்டம் சென்று அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் காதுகுத்துக்கே டெல்டாவில் இருந்து மதுரைக்கு வந்திருப்பது மதுரை திமுகவினர் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்ததாக
மருதுபாண்டியர், தேவர் குருபூஜைக்கு மதுரை சிவகங்கை இராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜாவை சிறப்பான முறையில் வரவேற்க நெருங்கிய வட்டங்களுக்கு வாய்மொழி உத்தரவுபறந்திருக்கிறது
அரசியல் ராஜாவுக்கு கைகொடுக்குமா! மகேஷை விட தலைமையிடம் செல்வாக்கு அதிகரிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும் என்கிறார்கள் மதுரை உடன்பிறப்புகள்!

