கோவை:தங்கையின் கல்யாணத்திற்காக 11 ஆண்டுகளாக வளர்த்த செல்ல பிராணியின் உடலை பார்த்து கதறிய குடும்பத்தினர்!!!
11/26/2024
0
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரத். இவர் தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வருகின்றார். இவருடைய தந்தை குணசேகரன் மற்றும் தாயார் குமார் ஆகியோர் இருவரும் கூலித் தொழிலாளிகளாக வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவருடைய தங்கை சுருதிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று உள்ளது. கடந்த 22 ஆம் தேதி கோவை ஜென்னி ரெசிடென்சியில் அதற்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் இவர்கள் சஞ்சு என்ற நாயை கடந்த 11 ஆண்டுகளாக வளர்த்து வந்து உள்ளனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி இருப்பதால் அந்த நாயை பராமரிப்பதற்காக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சஞ்சு விலங்குகள் நல மருத்துவமனையில் ஒரு நாள் வைத்து பராமரிக்க வேண்டும் என்று கூறி கடந்த 21 ஆம் தேதி காலை கொடுத்து விட்டு சென்று உள்ளனர். அதற்கு கட்டணமாக 1,200 ரூபாயும் கட்டி விட்டு வந்து உள்ளனர். அந்த நாயை மருத்துவர்கள் சுரேந்தர் மற்றும் கோபிகா ஆகிய இருவரும் கவனித்துக் கொள்வதாக கூறி அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் அன்று மாலையே மருத்துவமனையில் இருந்து சரத்திற்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு வந்து உள்ளது. உங்களுடைய நாய்க்கு உடல்நலம் சரியில்லை எனவே உடனடியாக வருமாறு தெரிவித்து உள்ளனர். இதனை தொடர்ந்து தனது தாய், தந்தையுடன் அவசர, அவசரமாக சரத் மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்று உள்ளார். அப்போது அங்கு அவருடைய செல்லப் பிராணியாக வளர்த்த நாய் இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சரத் மற்றும் அவருடைய பெற்றோர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு அவர்கள் சரிவர பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.இந்த நிலையில் சரத் இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார். போலீசார் புகாரின் பேரில் சி.எஸ்.ஆர் போட்டு விசாரணையை தொடங்கி உள்ளனர்.இந்த நிலையில் மருத்துவமனை சென்று தனது பவன் வளர்ப்பு செல்ல பிராணியை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுத வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
