உத்தமபாளையம் பேரூராட்சி துறையினரால் 6வது வார்டு ஆர்.சி.மேலக்கிணற்று தெருவில் புதிதாக கட்டப்பட்ட கழிவறையில் இருந்து மக்கள் குடியிருப்பு பகுதியில் பைப்லைன் வழியாக மலத்தை வெளியேற்றி வருவதால் அப்பகுதி மக்கள் நோய்த்தொற்றின் பிடியில் உள்ளனர். இப்பகுதியில் அங்கன்வாடி மையமும், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளதால் பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த கொடுமையான செயலால் மக்கள் முகம் சுழித்து வருகின்றனர்.பைப்லைன் வழியாக மலத்தை வெளியேற்றுவதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு அங்கன்வாடி பயிலும் சிறு பிள்ளைகளுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும் என்ற பயத்துடன் மக்கள் அன்றாடம் வாழ்ந்து வருகின்றனர்.மேலும்,இப்பகுதியில் சிறுபிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி நோய்த்தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றுவரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பலமுறை அப்பகுதி வாழ் மக்கள் பேருராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் இப்பகுதியில் எவன் சாவான் என்ற ரீதியில் பேரூராட்சி நிர்வாகம் வேடிக்கை பார்த்து வருவதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.வார்டு மக்களின் கோரிக்கைகளை காதில் வாங்காத அதிகாரிகளால் உள்ளாட்சி தேர்தலை இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இப்பகுதி மக்கள் ரோட்டில் இறங்கி போராட்டம் நடத்தும் முன்பு தமிழக அரசும், தமிழக முதல்வரும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டி ஒற்றை கோரிக்கையும் எழுந்துள்ளது.