திண்டுக்கல்:ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் குளங்கள் மற்றும் நீர் வரத்து வாய்க்கால்களில் கனிம வளங்கள் அழிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை!!!
2/25/2025
0
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், சில்வார்பட்டி குளத்தில் பட்டபகலில் தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் மண்திருட்டு நடைபெற்று வருவதை விவசாயிகள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என புகார் செய்வதோடு ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் குளங்கள் மற்றும் நீர் வரத்து வாய்க்கால்களில் கனிம வளங்கள் அழிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள குளங்கள், நீர் நிலைகள் மற்றும் மழைநீர் வரப்பு வாய்க்கால் பகுதிகளில் இரவு நேரங்களில் மண் திருட்டு நடைபெறுவதாக விவசாயிகள் புகார் செய்கின்றனர். குறிப்பாக சில்வார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாலைக்கோயில்பட்டி குளத்தில் பட்டப்பகலில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுத்து டிராக்டர், டிப்பர் லாரிகள் மூலம் தொடர்ந்து மண்ணை திருடி வருகின்றனர். இதுதவிர ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள குளங்கள் மற்றும் நீர்வரத்து பகுதிகளில் மண்திருட்டு படுஜோராக நடைபெற்று வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து மண் திருட்டு நடைபெற்று வருவதால் மழை பெய்தால் அப்பகுதியில் உள்ள குளங்களில் மழைநீரை சேமித்து வைத்து முடியாத நிலை ஏற்படுவதோடு மண் திருட வரும் கும்பல்கள் கரைகளை உடைத்து மண் திருடி செல்வதால் மழைநீரை குளங்களில் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் இப்பகுதியில் மண் திருட்டு நடைபெறுகிறது. கேட்டால் சீட்டு போட்டு எடுக்கிறோம் என்கிறார்கள். ஆனால் முறையான அனுமதி பெற்று மண் எடுப்பதில்லை திருட்டுத்தனமாக எடுப்பதால் குளத்தை பத்து அடி ஆழத்திற்கு மண்ணை எடுத்துள்ளார்கள். இதனால் மழைக்காலங்களில் சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிர் இழக்கும் அபாயம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் இப்பகுதியில் கனிம வள திருட்டை தடுக்க வேண்டும் என்றும் நீர் ஆதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைவிடுத்தனர்.
