கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் இரத்தினபுரி பகுதியில் நடைபெற்றது.மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைப்பில் நடைபெற்றஇதில்ஆண்கள், பெண்கள்,இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களை பல்சமய நல்லுறவு இயக்கத்தில் இணைத்து கொண்டனர்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தலைமை விருந்தினராக பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி கலந்து கொண்டு பேசினார்..
அப்போது பேசிய அவர் மதங்களை வைத்து சிலர் அரசியல் செய்ய நினைப்பதாகவும் ஆனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அதற்கு ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.பல்சமய நல்லுறவு இயக்கத்தில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து மத நல்லிணக்கத்தோடு பணியாற்றி வருவதே அதற்கு சான்று என சுட்டி காட்டினார்.தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன..
இதில் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இரு மொழி கொள்கையை பின்பற்றி வரும் நிலையில், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நீதியை தர முடியும் என அறிவித்ததற்கு வன்மையாக கண்டிப்பதாகவும், ஒன்றிய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்கவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.மேலும் தமிழ்நாட்டில் கல்வி மட்டும் இன்றி, பல்வேறு துறைகளுக்கு ஒன்றிய அரசாங்கம் தரவேண்டிய நிலுவைத் நிதியை, உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.கூட்டத்தில் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் அபுதாகீ்ர், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இஸ்மாயில், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் டிஸ்கோ காஜா, மாவட்ட துணைத் தலைவர் முகமது அலி கௌரவத் தலைவர் ஆனந்தகுமார் மாவட்ட செயலாளர் சந்திரசேகர் மற்றும் திருக்குறள் அன்வர் பாஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…
