வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்து அவர்களை அந்த நோயில் இருந்து குணப்படுத்தி, இயல்பான மற்றும் நிறைவான வாழ்க்கையை அவர்களுக்கு வழங்கி, அவர்களின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னை ஏற்படுத்தி உள்ளது.
இதை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சியை ஒன்றை இம்மருத்துவமனை நடத்தியது. இதில் வலிப்பு நோயிலிருந்து வெற்றிகரமாக மீண்ட நோயாளிகளை தமிழக அரசின் மாற்றுத் திறனாளிகள் நல ஆணையரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான சுதன், டிசம்பர் 3 இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் டி எம் என் தீபக் முன்னிலையில் கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் சென்னை ஜெமினி தலைவர் மகபூ பாஷா; ஹீலர்ஸ் நியூட்ராசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் தீபா சாத்தே, கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னை மற்றும் ஐதராபாத் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நாகேஸ்வர ராவ் மற்றும் கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னை, நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் பிரிவு இயக்குனர மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் தினேஷ் நாயக் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் இரண்டாவது திங்கட்கிழமை சர்வதேச கால்-கை வலிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதை கருத்தில் கொண்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஆண்டு இந்த தினம் "எனது எபிலெப்சி ஜர்னி", என்னும் தலைப்பில் கால்-கை வலிப்பு உள்ளவர்களின் தனிப்பட்ட அனுபவங்களையும், முறையான சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் இந்த நோயில் இருந்து மீண்டு வரலாம் என்பதை வலியுறுத்தும் வகையில் கடைபிடிக்கப்படுகிறது. மேம்பட்ட மருத்துவ சிகிச்சைகள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புள்ள மருத்துவ நிபுணர்கள் குழு மூலம், சென்னையிலுள்ள கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் எண்ணற்ற நபர்களை வலிப்பு நோயில் இருந்து குணப்படுத்தி உள்ளது.
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது ஓராண்டிற்கு முறையான மருந்து மற்றும் சிகிச்சையை எடுத்துக் கொள்ளும்போது அதில் இருந்து அவர்கள் விடுபடலாம். இந்தியா உட்பட உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம் ஆகும்.
இது குறித்து கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னை, நரம்பியல் மற்றும் வலிப்பு நோய் பிரிவு இயக்குனர மற்றும் மூத்த ஆலோசகர் டாக்டர் தினேஷ் நாயக் கூறுகையில், கால்-கை வலிப்பு உள்ளவர்களின் வாழ்க்கையை மாற்றுவதில் எங்கள் மருத்துவமனை முக்கிய பங்கு வகித்துள்ளது. நோயை துல்லியமாக கண்டறிந்து, அதற்கு சரியான மற்றும் நவீன சிகிச்சை அளித்ததன் காரணமாக இவர்கள் அந்த நோயில் இருந்து விடுபட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
மருத்துவ சிகிச்சைக்கு அப்பால், கால்-கை வலிப்பால் பாதிக்கப்பட்டவர்களை மற்றவர்கள் நடத்தும் விதம் மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது. இதை போக்குவது என்பது சவால் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது. மேலும் கால்-கை வலிப்பு பற்றி மக்களிடம் நிலவும் தவறான கருத்துக்கள் காரணமாக இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான பராமரிப்பு மற்றும் ஆதரவு இல்லாமல் போகிறது. இது அவர்களின் சமூக மற்றும் தொழில்முறை வாழ்க்கையை வெகுவாக பாதிக்கிறது. இருப்பினும், இந்த நோயில் இருந்து விடுபட்டவர்கள் மற்றவர்களைப் போலவே சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை வாழ முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
கிளெனீகல்ஸ் ஹாஸ்பிடல் சென்னை மற்றும் ஐதராபாத் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நாகேஸ்வர ராவ் கூறுகையில், கால்-கை வலிப்பு ஒரு நபரின் ஆற்றலையோ அல்லது எதிர்காலத்தையோ வரையறுக்காது. வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண வாழ்க்கையை வாழ முடியாது என்ற நம்பிக்கை முற்றிலும் பொய்யானது. சரியான மருத்துவ உதவி இருந்தால், வலிப்பு நோயிலிருந்து விடுபடலாம். மேலும் அவர்கள் தங்கள் கனவுகளை நோக்கி பயணிக்கலாம். எங்கள் மருத்துவமனையில் இதற்கு சிகிச்சை அளிக்க நவீன வசதிகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையையும் சிறந்த சிகிச்சையையும் நாங்கள் வழங்கி வருகிறோம். அவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் என்று தெரிவித்தார்.
