தேனி:போடிநாயக்கனூர்அரசு பொறியியல் கல்லூரி மாணவர் விக்னேசு மரணத்திற்கு நீதி கோரி தமிழ் மக்கள் உரிமை முன்னணி ஒருங்கிணைப்பில் ஆர்ப்பாட்டம்!!!
3/10/2025
0
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த விக்னேசு என்ற மாணவர், கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி விடுதி கழிவறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். குருதி வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்ட, பட்டியல் சாதியைச் சேர்ந்த மாணவர் விக்னேசின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. விக்னேசின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் காவல்துறையினர் முன் முடிவுடன், விக்னேசின் மர்ம மரணத்தின் பின்னணியை மறைக்கும் நோக்கத்துடனும், குற்றவாளிகளைத் தப்ப வைக்கும் நோக்கத்துடனும் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் விக்னேசின் வழக்கு விசாரணையை த.நா குற்றப் பிரிவு - குற்றப் புலனாய்வுத்துறை (CB -CID) க்கு மாற்ற வலியுறுத்தியும், விக்னேசின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கத் தலைவர்கள் இக்கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசியும் எழுதியும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள்.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியிலும் பிப்.24 ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேனி மாவட்ட காவல்துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை நாடி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி பெற்று, நீதிமன்ற உத்தரவுடன் மார்ச் 7ம் தேதி தேனி பங்களாமேட்டில் தமிழ் மக்கள் உரிமை முன்னணி அமைப்பாளர் மதியவன் இரும்பொறை தலைமையில் தமிழ் தேசிய மார்க்சிய கழக நிர்வாகி சௌந்திர பாண்டியன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடனும் பெருந்திரளான மக்கள் பங்கேற்புடனும் நடைபெற்றது.கோரிக்கைகளை ஆதரித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புகள்: தமிழ் மக்கள் உரிமை முன்னணி, தமிழ்த் தேச மார்க்சியக் கழகம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி,தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ. மாவோ சிந்தனை), மக்கள் தமிழகம் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ,விடுதலை), புரட்சிகர சோசலிசக் கட்சி,பாண்டியகுல வணிகர் சங்கம்,திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி,மள்ளர் பேராயம், தேவேந்திரகுல மக்கள் முன்னேற்றப் பேரவை,SDPI, வெல்ஃபேர் கட்சி,ஆதித் தமிழர் பேரவை,தமிழ்ப் புலிகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி,புரட்சித் தமிழர் கட்சி, எழில் கலாசார பண்பாட்டு இயக்கம்,மெய்வழி மக்கள் இயக்கம்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
