இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர், கோவை மாநகர மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் மற்றும் பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய எச்.ராஜா, தி.மு.க அரசு மும்மொழி கொள்கை விவகாரத்தில் அரசியல் செய்து வருவதாகவும், இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல பா.ஜ.க சார்பில் கையெழுத்து இயக்கம் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், பா.ஜ.க வினர் அதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. பொருளாதார ரீதியாக தவறு செய்தவர்கள் மீது அமலாக்கத் துறை சோதனை நடத்துவது சாதாரணமாகும். ஆனால் தமிழகத்தில் அரசு துறையின் தலைமை அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருவது புதியதாக உள்ளது. இப்போது 1,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்று உள்ளதாக கூறப்பட்டாலும் ஊடகங்களில் 4,000 கோடி, இரண்டு லட்சம் கோடிகளில் ஊழல் நடைபெற்று உள்ளதாக பேசப்படுகிறது.
டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி மது உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆகிய இடங்களிலும் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கையில் உள்ளது. இதுகுறித்து முழுமையான அறிக்கை கிடைத்த பின்பு இன்னும் பல தகவல்கள் வெளிவரும். டெல்லியில் இதே போல் சட்ட விரோத மதுபான முறைகேடுகள் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். அதே போல் தமிழகத்திலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.டாஸ்மாக் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் தி.மு.க அரசு ஊழல் செய்துள்ளது. குறிப்பாக, பிரதமரின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் ஒரு கழிவறை கட்ட 12 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. அதுவே தி.மு.க அரசு, சென்னையில் கழிவறை கட்ட பல கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டு, பராமரிப்பு செலவுக்காகவே மாதம் 12,000 ஒதுக்குகிறது.தி.மு.க அரசின் பட்ஜெட்டை பொருத்தவரை 2026 ஆம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்து அறிவிக்கப்பட்ட பட்ஜெட் ஆக உள்ளது. ஏற்கனவே முந்தைய பட்ஜெட்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையே இன்னும் அவர்கள் அமல்படுத்தவில்லை. திமுக அரசு தமிழகத்தின் கடன் சுமையை தான் அதிகரித்து உள்ளது" என தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து காளப்பட்டி பகுதியில், தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாகவும் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்டு வரும் கையெழுத்து இயக்கத்தில் எச். ராஜா கலந்து கொண்டார்.