1971 ஆம் ஆண்டு, நான் அப்போது எட்டு வயது சிறுவன். அன்று இரவு சுமார் ஏழு மணி இருக்கும். சென்னை, மயிலாப்பூரில் உள்ள வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தேன். எப்போதும் கேட்டிராதபடி பயங்கர சைரன் ஒலி அலறியது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. அக்கம் -பக்கத்தில் பெட்ரோமாக்ஸ் விளக்கில் கடை நடத்திக் கொண்டிருந்த கடைக்காரர்கள் வேக, வேகமாக விளக்குகளை அணைத்தனர். ஊரே இருளில் மூழ்கியது.பயந்து போன நான் நாற்காலியில் அமர்ந்திருந்த என் தாயின் மடியை நோக்கி ஓடினேன்.ஒரு விமானம் டார்ச் லைட் போன்ற வெளிச்சத்தை பீய்ச்சி அடித்தபடி தாழ்வாகப் பறந்து சென்றது. அந்த விமானம் சென்ற சிறிது நேரத்தில் மின்விளக்குகள் மீண்டும் எரிந்தது. கடைக்காரர்கள் தங்கள் விளக்குகளை மறுபடியும் ஒளிர விட்டுக் கொண்டு வணிகத்தைத் தொடர்ந்தனர்.இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்ற கால கட்டம் அது. எதிரி நாட்டு போர் விமானம் வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான ஒத்திகை என்பதையும் , அப்போது வெளிச்சமிட்டு பறந்து சென்றது இந்திய விமானப்படையைச் சேர்ந்த விமானம் என்பதையும் பின்னர் தெரிந்து கொண்டேன்.இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம்,போர் ஒத்திகை சூழல் மனதுக்கு வேதனையாக உள்ளது.
போரின் விளைவாக எந்த அளவுக்கு மனித உயிர்கள் பலியாகும் என்பதற்கு இரண்டு உலகப் போர்கள் சாட்சியாக உள்ளன.இஸ்ரேல்-பாலஸ்தீனம்,ரஷ்யா-உக்ரேன் இடையை தற்போது நடைபெற்று வரும் போரின் விளைவாக செத்து விழுந்து கொண்டிருக்கும் குழந்தைகள், பெண்கள், அப்பாவி பொதுமக்கள்தான் எத்தனை எத்தனை பேர்.!இதை நிறுத்தப் சொல்லி கண்டனக் குரல்கள் எழுகின்றனவே தவிர,நிறுத்துவதற்கு உலகின்எந்த சக்தியாலும் முடியவில்லை.காஷ்மீர் மாநிலம் பகல் காமில் பயங்கரவாதிகள் அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதலை மனம் படைத்தோர் எவருமே ஏற்க மாட்டார்கள்.காஷ்மீர் மக்கள் கொதித்து எழுந்து போராட்டம் நடத்தினார்கள். அம்மாநிலத்தின் பல ஊர்களில் கடை அடைப்புகள் நடத்தப்பட்டன.இந்த பயங்கரவாதிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேசமயம் அடிப்படை அறிவு இல்லாத வெறியர்கள் சிலர் புரிந்த செயலுக்காக பல கோடி அப்பாவி மக்களின் வாழ்வாதாரம் தொடர்புடைய சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்தது ஏற்புடைய நடவடிக்கை அல்ல.தாக்குதலில்ஈடுபட்டபயங்கரவாதிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் சொல்லி வருகின்றனர். அங்கு உச்சகட்ட அதிகாரம் ஆள்பவர்களிடம் இருக்கிறதா? ராணுவத்திடம் இருக்கிறதா?,தெரியவில்லை. பாகிஸ்தானில் தனி நாடு கேட்டுப் போராடிவரும் பலுசிஸ்தான் தீவிரவாதிகள்அ.ண்மையில் ஒரு ரயிலையே கடத்தி, அந்நாட்டு ராணுவத்தினர் பலரைக் கொன்று குவித்தார்கள். பாகிஸ்தானின் இயலாமையை அச்சம்பவம் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இத்தகைய பலவீனமான பாகிஸ்தான், இந்திய மண்ணில் பிரிவினைவாதத்தையும் கலவரத்தையும் தூண்டும் செயல்களை மேற்கொள்ளும் பட்சத்தில், அதற்கு எதிராக உறுதியான பல நடவடிக்கைகள் எடுக்க முடியும். அதற்கு நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் முழு ஆதரவாக நிற்பார்கள்.இப் பிரச்சனையை உணர்வு பூர்வமாக அணுகி அது போராக மாறும் பட்சத்தில், முதலில் பெரும் பாதிப்புகளை சந்திக்கப் போவது இரு நாடுகளிலும் வாழும் அப்பாவி பொது மக்கள் தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்டால் பெரும் சேதங்கள் விளையும், போரைத் தவிருங்கள் என ஐ.நா. மன்றம் வலியுறுத்தி வருகிறது.டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, உலக அரசியல் பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது .அமெரிக்காவை நம்பி ரஷ்யாவுடன் போரில் இறங்கிய உக்ரைனை அமெரிக்கா கைவிட்டு விட்டது ."அமெரிக்கர்கள் நலம்" என்ற அடிப்படையிலேயே டிரம்ப் காய்களை நகர்த்துகிறார். உக்ரைனை வென்று சில நாட்களில் போரை முடித்துக் கொள்ளலாம் என்று புதின் கனவு கண்டார். ஆனால் போர் முடியவில்லை. சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும் உலக பொருளாதாரத்துக்கும் பெரும் இழப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஒரு நாட்டை ஆள்பவர்களுக்கு இதெல்லாம் பாடம். போரைத் தொடங்குவது மிகவும் எளிது. ஆனால் அதை நிறுத்தும் சக்தி பூமியில் யாருக்கும் இல்லை அப்பாவி மக்களை எல்லாம் கொன்று குவித்து, ஈடு செய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தி விட்டு தான் அது ஓயும்.காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் மனப்பண்ணை ஆற்றும் சரியான நடவடிக்கை மட்டுமே பயங்கரவாதிகள் அம்மண்ணில் நுழைவதையும், முளைப்பதையும் தடுக்கும். பயங்கரவாதிகளுக்கு தீனி போட்டு வளர்த்து அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் இனியாவது தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் மண்ணில் தோன்றிய மாமன்னன் அசோகன், உக்கிரமான போருக்குப் பிறகு ,தன் வெற்றியைக் கொண்டாடாமல், போரின் கொடுமைகளை நேரில் கண்டு மனம் வருந்தி, தன்ஆயுதங்களைதூக்கிஎறிந்துவிட்டு அன்பும் அறமும்தான் தேவை" என்ற செய்தியை உரக்கச் சொன்னான். அக்காலத்துக்கு மட்டுமல்ல எக்காலத்திலும் இப்பூமிப்பந்தின் நலத்துக்கு இது தான் தேவை.
''அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை''(திருக்குறள் 76)
பொருள் :அறம் செய்வதற்கே அன்பு துணையாக உள்ளது என்று அறியாதவர் கூறுவர். தீமையை ஒழிப்பதற்கும் அதுவே துணையாக இருக்கும்.
ம.வி.ராசதுரை
மூத்த பத்திரிகையாளர்.