கடலூர்:ஜப்பான்,மலேசியா, சிங்கப்பூர் ஏற்றுமதியாகும் நண்டுகள் பராமரிக்கும் மீனவ இளைஞர்!!!

sen reporter
0

கடலூர் சின்ன குப்பம் பண்ணையில் வளர்க்கப்படும் நண்டுகள் சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.அதிக எண்ணிக்கையிலான மீனவ இளைஞர்கள் இந்த தொழிலுக்கு வருவார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, நல்ல வருமானமும் கிடைக்கும் என நண்டு பண்ணை அமைத்து லாபம் ஈட்டி வரும் கடலூர் சின்ன குப்பம் மீனவ இளைஞர் வினோத் குமார் தெரிவித்தார்.கடல் உணவுகளில் முக்கிய இடம் வகிப்பது நண்டு. பிரபலமாக உணவகங்கள் முதல் சின்னஞ்சிறு சாலையோர கடைகள் வரை நண்டு உணவு தற்போது பிரபலமாகியுள்ளது. நண்டுகளில் மண் நண்டு மற்றும் தண்ணீர் நண்டு என இரு வகைகள் உள்ளன. இதில் தண்ணீர் நண்டுகளை யாரும் பொருட்படுத்துவதில்லை. ஆனால், அந்த தண்ணீர் நண்டுகளை பண்ணையில் வளர்த்து மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார் சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே உள்ள கடலூர் சின்னக் குப்பத்தை சேர்ந்த வினோத் குமார்.இந்த கடலோர கிராமத்தில் உள்ள மக்களின் ஒரே வேலை மீன் பிடிப்பது தான். தற்போது 32 வயதாகும் வினோத் குமாரின் தந்தையும் மீனவர் தான். அங்குள்ள பள்ளியில் படிப்பை முடித்த வினோத் குமாரால், குடும்ப சூழலால் உயர் கல்வியை தொடர முடியவில்லை. தொடர்ந்து தனது 18-வது வயதில் தந்தையுடன் சேர்ந்து மீன் பிடிக்கச் சென்றார். ஆனால், 2 பேர் மீன் பிடிக்க சென்றும் குடும்பத்திற்கு போதிய வருவாய் கிடைக்காததால் என்ன செய்யலாம் என்று யோசித்தார் வினோத் குமார். அப்போது அவருக்கு தோன்றியது தான் நண்டு பண்ணை.பொதுவாக கடலோரப் பகுதிகளில் அதிக சதைப்பற்றுடன் இருக்கும் மண் நண்டுகளுக்கு எப்போதும் கிராக்கி உண்டு. ஆனால், சதை இல்லாமல் வெறும் தண்ணீர் மட்டும் நிரம்பி இருப்பவை தண்ணீர் நண்டுகள் என அழைக்கப்படுகின்றன. இத்தகைய நண்டுகளை யாரும் வாங்குவதில்லை. இது எதற்கும் பயன்படாது என்று பெரும்பாலோர் பிடிப்பதும் இல்லை. அப்படியே பிடித்தாலும் அது நல்ல விலைக்கும் போகாது. தண்ணீர் நண்டுகளை பிடித்து அதனை வளர்த்தால் நல்ல விலைக்கு விற்க முடியும் என முடிவு செய்தார் வினோத் குமார்.

தண்ணீர் நண்டுகளை வளர்க்க தனி பண்ணை வைக்க வேண்டும் என்ற அவரது யோசனையை குடும்பத்தில் யாரும் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர், அவர்களை சமாதானம் செய்து கடற்கரை அருகே செயற்கையாக உருவாக்கப்பட்ட குட்டையில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே நண்டு பண்ணை அமைத்தார்.இது குறித்து அவர் கூறுகையில், மீன்பிடி வருமானத்தை மட்டுமே வைத்து குடும்பத்தை நடத்துவது கடினமாக இருந்ததால் நண்டு பண்ணை அமைக்கும் முயற்சியில் இறங்கினோம். இதில், வலையில் சிக்கும் மண் நண்டுகள் அதிக சதைப்பற்றுடன் இருந்தால் சந்தைக்கு அனுப்பி விடுவோம். சதை இல்லாமல் தண்ணீர் நிரம்பி இருந்தால் அந்த நண்டை பண்ணையில் வைத்து சதைப்பற்று வரும் வரை வளர்த்து நல்ல விலைக்கு விற்பனை செய்வோம் என்றார்.மேலும், தண்ணீர் நண்டுகளை வளர்ப்பது ஒரு மிகப் பெரிய கலை என்று சிலாகித்து கூறுகிறார் வினோத் குமார். இது குறித்து அவர், இந்த நண்டுகளை வளர்க்க காலை, மாலை என இரண்டு நேரமும் அதற்குரிய உணவுகளை (மீன் குஞ்சுகள்) போடுவோம். நண்டுகளை வளர்க்கும் பெட்டிகளை தினமும் சோதனை செய்ய வேண்டும். இந்த பெட்டி உடைந்தால் நண்டு தண்ணீரில் தப்பி ஓடி விடும். சில சமயங்களில் நண்டுகள் உயிரிழக்கும் வாய்ப்பும் உள்ளது. அதே போல், இந்த நண்டுகளை வளர்க்கும் பகுதி பள்ளமாகவும், நீரோட்டமாகவும் இருக்க வேண்டும்.நீரில் உள்ள உப்பு மற்றும் சுண்ணாம்பின் அளவு சரியாக இருக்க வேண்டும். மழை பெய்யும் சமயத்தில் தண்ணீரில் உள்ள உப்பு அளவு குறைந்து நண்டுகள் உயிரிழக்கு வாய்ப்பு அதிகம். இந்த வகையான தண்ணீர் நண்டுகள் 20 முதல் 30 நாட்கள் பராமரிப்பிற்கு பிறகே சதை போடும். அதன் பிறகே சந்தைக்கு அனுப்புவோம். ஒரு நண்டை ரூ.500-க்கு வாங்கி அதனை வளர்த்து சந்தையில் ஒரு கிலோ ரூ.2,500 முதல் ரூ.3,500 வரை விற்பனை செய்து வருகிறோம் என்றார்.சராசரியாக மாதத்திற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். ஆனால், மழை பெய்து அதிகளவு தண்ணீர் தேங்கினால் வருமானம் கிடைக்காது. ஒரு மாதத்திற்கு 50 முதல் 100 கிலோ வரை நண்டுகளை விற்பனை செய்கிறோம். நாங்கள் சந்தையில் விற்கும் நண்டுகளை மொத்தமாக வாங்கும் ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றை சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு அனுப்பி விடுகின்றன என்றார்.

மற்றதை காட்டிலும் தண்ணீர் நண்டுகள் சுவையாக இருக்கும். இதில் பெண் நண்டுகள் பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும் அதிக எடை கொண்டதாக இருக்கும். ஆனால், ஆண் நண்டுகள் உருவத்தில் பெரியதாக இருக்கும். ஆனால், எடை குறைவாக இருக்கும். இந்த நண்டுகளை சந்தைக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் விற்பனை செய்து வருகிறோம். பொதுமக்கள் சமையலுக்கு வாங்கிச் செல்கின்றனர். ஒரு நண்டின் எடை 750 கிராமுக்கு மேல் இருந்தால் அதற்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். ஒரு நண்டு அதிகபட்சம் 3 கிலோ எடை வரை இருக்கும் என்று அவர் கூறினார்.தொடர்ந்து நம்மிடம் பேசிய வினோத் குமார், கடந்த 4 ஆண்டுகளாக இந்த நண்டு பண்ணை தொழிலை செய்து வருகிறோம். நாங்கள் செய்யும் இந்த தொழிலை பார்த்து எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களும் இதே போன்று நண்டு பண்ணை அமைத்து வருமானம் ஈட்டி வருகின்றனர். எனவே, இது போன்று நண்டு பண்ணை அமைப்பவர்களுக்கு, நண்டை வளர்க்கத் தேவையான பெட்டிகள், பைப், நண்டுகள் வளர்க்க செயற்கை குட்டை உள்ளிட்ட வசதிகளை, அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அதிக எண்ணிக்கையிலான மீனவ இளைஞர்கள் இந்த தொழிலில் வருவார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதோடு, நல்ல வருமானமும் கிடைக்கும் என தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top