ஆனால் ஆட்சிக்கு வந்து கடந்த நாலரை ஆண்டாக எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அத்துடன் பழைய ஓய்வூதியத் திட்டம் இன்னமும் அமல்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கடந்த பட்ஜெட் கூட்ட தொடரில் சரண் விடுப்பு தொகை மட்டும் வழங்குவதாக அரசு அறிவித்தது. இது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு குழு அமைப்பதாகவும். இந்த குழுவின் அறிக்கையை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.ஆனால், அவ்வாறு செய்யாமல் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்து கால அவகாசம் வழங்கி இருப்பது அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என்ற வாக்குறுதியும் நிறைவேறவில்லை. சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி, செவிலியர்கள், நூலகர்கள் என பல பிரிவுகளில் பணியாற்றுவோருக்கு சிறப்பு ஊதியமும், மதிப்பூதியமும் வழங்கப்படவில்லை.ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பல அரசாணைகள் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம் மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் மீதம் உள்ள பணம் எல்.ஐ.சி கணக்கில் செலுத்தப்பட வேண்டும். இதன் மூலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த முடியும்.
இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை டிசம்பர் மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றாவிட்டால் அடுத்தக்கட்டமாக தொடர் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என்று வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்தார்.இதற்கிடையே ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற 50 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் இதுபற்றி விளக்கம் கேட்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அந்த அதிகாரி கூறுகையில், தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் 1 லட்சத்து 16 ஆயிரத்து 932 பணியாளர்களில் 81 ஆயிரத்து 718 பேர் பணிக்கு வந்தனர். 5 ஆயிரத்து 459 பேர் விடுமுறையில் இருந்தனர். 29 ஆயிரத்து 755 பேர் பணிக்கு வரவில்லை. 25.4 சதவீதம் ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை. அதனால் சில பள்ளிகள் ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கும் நிலை ஏற்பட்டது.அதே போல் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றி வரும் 1 லட்சத்து 75 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை.பள்ளிக்கு வராத அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டு, சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
