வேலூர் ஆக்ஸீலியம் கல்லூரியில் மனித நேயமும், சேவை மனப்பான்மையும் கருத்தரங்கம்!!!!
11/26/2025
0
வேலூர் ஆக்ஸீலியம் கல்லூரியின் யூத் ரெட்கிராஸ் அமைப்பும், காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கமும் இணைந்து மனித நேயமும், சேவை மனப்பான்மையும் கருத்தரங்கத்தை 26.11.2025 அன்று கல்லூரியின் அரங்கில் நடத்தியது.கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்லூரியின் முதல்வர் எ.ஆரோக்கிய ஜெயசீலி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் அமலா வளர்மதி முன்னிலை வகித்தார். பேராசிரியர் வி.கங்கா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற தொழிற்கல்வி ஆசிரியரும், காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் பங்கேற்று யூத் ரெட்கிராஸ் கையேட்டினை வழங்கி மனிதநேயமும் சேவை மனப்பான்மையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.உலகில் வாழக்கூடிய முகம் தெரியாத நபர்கள் நம்மை பார்த்து சிரிப்பது கூட ஒரு மனிதநேயம் தான். மனிதநேயம் என்பது சக மனிதர்களின் மீது பாசம் வைப்பது, கருணை, இரக்கம் காட்டுவது போன்றதாகும். சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். இதில் உயிரிரக்கப் பண்பு என்பது மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்றும் கூறலாம். 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர... சகோதரிகளே...’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார். தமிழ் மொழியில் மனித நேயம் "அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு" - திருவள்ளுவர் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று கூறுகிறார். கணியன் பூங்குன்றனார். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்றார். வள்ளலார் மனித நேயம் காத்த மனிதர்கள் அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா தற்போதைய சூழலிலும் அன்னை தெரசா போல் நிறைய பெண்கள் பல குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதே உண்மை என்றார். மேலும் அவர் பேசுகையில் மாணவிகள் கைபேசியினை கல்வி கற்பதற்கான கருவியாக பயன்படுத்த வேண்டும். பொழுதுபோக்கு கருவியாக பயன்படுத்தக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிப்போம். நன்றாக படிப்போம். நாமும் வளர்வோம். நம்மால் நம் நாட்டையும் வளர்தெடுப்போம் என்றார்.நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பேரா.பே.அமுதா, பேரா.ஆர்.காயத்ரி, கல்லூரியின் யூத் ரெட்கிராஸ் அமைப்பின் நிர்வாகிகள் பேராசிரியர்கள் செயலாளர் எ.மேரிஜோசப்பின் ராணி, இ.லதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். யூத் ரெட்கிராஸ் அமைப்பின் 260 மாணவிகள் பங்கேற்றனர்.உதவி பேராசிரியர் எ.நித்யா நன்றி கூறினார்.
