
மதுரை மாவட்டத்தையும், சிவகங்கை மாவட்டத்தையும் இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலையாக மதுரை - தொண்டி சாலை திகழ்கிறது. அண்ணா பேருந்து நிலையம், ஆவின் சந்திப்பு, மேலமடை ஆகிய பகுதிகளில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளதால் இப்பாதையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகக் காணப்பட்டது. குறிப்பாக, பீக் ஹவர்ஸ் எனப்படும் நெரிசல் மிகுந்த நேரங்களில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.இதற்கு தீர்வு காணும் வகையில் மேற்குறிப்பிட்ட மூன்று பகுதிகளையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. திவா. நாத் இந்தியா ப்ராஜக்ட்ஸ்’ நிறுவனம் இப்பணிகளை மேற்கொண்டது. கடந்த 30.10.2023 அன்று இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், அதாவது பணிகள் தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குள் மிக விரைவாகப் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.மேலமடை சந்திப்பில் மையத் தடுப்புடன் கூடிய 4 வழித்தட சாலை மேம்பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது. 25 தூண்கள் தாங்க மொத்தம் 950 மீட்டர் நீளத்திற்கு இப்பாலம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் 7.5 மீட்டர் அகலத்தில் அணுகுசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.குறிப்பாக, ஆவின் சந்திப்பு முதல் அப்பல்லோ சந்திப்பு வரை இருந்த திறந்தவெளி வாய்க்கால் மீது நில எடுப்பு செய்யாமலேயே நவீன தொழில்நுட்பத்தில் 900 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் இடதுபுற சேவை சாலை அமைக்கப்பட்டிருப்பது இத்திட்டத்தின் முக்கிய தொழில்நுட்பச் சாதனையாகும்.
மேலும், அண்ணா பேருந்து நிலையம் முதல் ஆவின் சந்திப்பு வரை நில எடுப்பு செய்யப்பட்டு சாலை 4 வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. பாதசாரிகள் பாதுகாப்பாக செல்ல நடைமேடைகள், பேருந்து நிறுத்தங்களுக்கு தனி இடவசதி, மேம்பாலம் மற்றும் சேவை சாலையில் நவீன மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய மேம்பாலம் திறக்கப்பட்டதன் மூலம், மதுரை - தொண்டி சாலையில் கோரிப்பாளையம் முதல் ரிங் ரோடு வரை போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். ஆவின் சந்திப்பு மற்றும் மேலமடை சந்திப்புக்கு கீழே ரவுண்டானா அமைக்கப்பட்டு மேம்பாடு செய்யப்பட்டுள்ளதால் சிக்னல் இல்லா பயணத்தை பொதுமக்கள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.