
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் சக்திவேல். இவர் தமது 24-ம் வயதில் 2018 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டிருந்தபோது திடீரென தீவிரவாதிகள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவரது உடம்பில் குண்டு பாய்ந்ததில் சக்திவேல் வீரமரணம் அடைந்தார். இதுகுறித்து டிசம்பர் 4ஆம் தேதி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து சக்திவேலின் உடல் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் டாக்டர் பூஜா என்பவரது முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அங்கிருந்து விமானத்தின் மூலமாக சென்னைக்கு நேற்று கொண்டுவரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக அவரது உடல் சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.வீரமரணம் அடைந்த சக்திவேலின் உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது மனைவி தேவா ஸ்ரீ மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து தங்களது குடும்பத்தினருக்கு உதவி செய்யுமாறு கண்ணீர் மல்க கேட்டது காண்போரை கண்கலங்க செய்தது. அவரது கோரிக்கைக்கு செவிசாய்த்த மாவட்ட ஆட்சியர், சக்திவேல் குழந்தைக்கு ஆவடியில் உள்ள கேந்திர வித்யாலயாவில் படிக்க ஏற்பாடு செய்வதாகவும், அரசின் சார்பில் வீடு கட்டி கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
மாவட்ட ஆட்சியரை தொடர்ந்து, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ஆகியோர் ராணுவ வீரர் சக்திவேல் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அப்போது, ராணுவ வீரரின் குழந்தைகள் படிப்பிற்கும், அவரது குடும்பத்தினருக்கு வீடு கட்டி கொடுக்காவும் அரசின் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் நிறைவேற்றப்படும் என்று ஜெகத்ரட்சகன் எம்.பி.யும் உறுதியளித்தார்.
மேலும் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா தலைமையில் போலீசார் ராணுவ வீரர் சக்திவேல் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழக காவல் துறை சார்பில் சக்திவேல் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.