விருதுநகர் மாவட்டத்தில் எட்டாயிரம் ஆண்டுகள் பழமையான புதிய கற்கால தேய்ப்பு பள்ளங்கள் தென் தமிழ்நாட்டில் முதல்முறையாக கண்டுபிடிப்பு!!!

sen reporter
0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், செண்பகத்தோப்பில் சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன் பாறையில் புதிய கற்காலக் கைக்கோடரிகளை வழுவழுப்பாக்கும் போது உருவான தேய்ப்புப் பள்ளங்கள் தென் தமிழ்நாட்டில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த குறிப்பிட்ட பாறையில் தேய்ப்புப் பள்ளங்கள் உள்ளதாக நூர்சாகிபுரம் சு.சிவகுமார் கொடுத்த தகவலின் பேரில், அவருடன் இணைந்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.இதுபற்றி அவர்கள் இருவரும் கூறியதாவது, தமிழ்நாட்டுத் தொல்லியல் தளங்களின் அறிவியல் காலக் கணக்கீடுகள் மூலம் புதிய கற்காலம் கி.மு.7000 முதல் கி.மு.4000 வரையிலானது என தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறி வேளாண்மை, மட்பாண்டங்கள், நிரந்தரக் குடியிருப்புகள் ஆகியவை தோற்றம் பெற்றது புதிய கற்காலத்தில் தான்.செண்பகத்தோப்பு, வனத்துறை சோதனைச் சாவடி அருகில் உள்ள பாறையில் 4 தேய்ப்புப் பள்ளங்கள் உள்ளன. இவை புதிய கற்காலக் கைக்கோடரிகளை தேய்த்து வழுவழுப்பாக்கும் போது உருவானவை ஆகும். இவற்றின் அளவுகள் முறையே நீளம் 40, 46, 48, 20 செ.மீ, ஆழம் 3.5,3, 3,1 செ.மீ. என உள்ளது. நான்கும் ஒரே அளவில் 10 செ.மீ. அகலத்தில் உள்ளன. 3 பள்ளங்கள் நேராகவும், ஒன்று அதன் மேற்பகுதியில் குறுக்காகவும் அமைந்துள்ளன. நேராக உள்ள பள்ளங்கள் கற்கருவிகளை வழுவழுப்பாகத் தேய்க்கவும், குறுக்காக உள்ள சிறிய பள்ளம் அதை கூர்மையாக்கவும் பயன்பட்டிருக்கக் கூடும்.வட தமிழ்நாட்டில் உள்ள இத்தகைய தேய்ப்புப் பள்ளங்களுடன் ஒப்பிடும் போது இவற்றின் ஆழம் குறைவாகவே உள்ளது. கற்கருவிகள் தேய்க்குமிடங்கள் பெரும்பாலும் நீர்நிலைகள் அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு சிற்றோடை ஓடிய தடம் உள்ளது.தென் தமிழ்நாட்டில் புதிய கற்கால நாகரிகம் நிலவியதன் தடயங்களை தே.கல்லுப்பட்டியில் மத்திய தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் விழுப்பனூர், ராமநாதபுரம் மாவட்டம் போகலூர், குலபதம் ஆகிய இடங்களில் புதிய கற்காலக் கருவிகளையும், மதுரை மாவட்டம் கோபால்சாமி மலையின் கீழ் உள்ள பாறைகளில் புதிய கற்காலத்தில் பயன்படுத்திய அரைப்புப் பள்ளங்களையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்.தற்போது கண்டறிந்த தேய்ப்புப் பள்ளங்கள், சுமார் 8000 ஆண்டுகள் பழமையானவை. இவை தென் தமிழ்நாட்டில் புதிய கற்கால நாகரிகம் இருந்ததற்கான வலுவான சான்றாக உள்ளன. புதிய கற்கால தேய்ப்புப் பள்ளங்கள் தென் தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதன்முறை என தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top