விழுப்புரம் மாவட்டம் வானூர் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு பயிர்கள் நாசமானதாக மாற்றுத்திறனாளி விவசாயி வேதனை!!!
12/09/2025
0
வானூர் அருகே பக்கிரிபாளையம் என்ற கிராமம் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ளது. வீடூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால் பக்கிரிபாளையம் கிராம மக்கள் மற்றும் அங்குள்ள விவசாய நிலங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக வீடூர் அணை திறக்கப்பட்டது. இதனால் சங்கராபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து, மண்ணரிப்பு ஏற்பட்டு, சுமார் 10 ஏக்கர் பட்டா விவசாய நிலங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மாற்றுத்திறனாளி விவசாயி ஒருவர் கூறுகையில், என்னுடைய விவசாய நிலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் நான் பயிரிட்டிருந்த கத்திரிக்காய், வெண்டைக்காய் போன்ற பயிர்களும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.மேலும் அதிக அளவில் தண்ணீர் வந்தால் ஆற்றங்கரையோரம் இருக்கும் தங்களது வீடுகளும், விவசாய நிலங்களும் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இதற்கு தீர்வு காண வேண்டி ஆற்றங்கரையோரம் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றுச்சுவர் மற்றும் பாறைக்கற்கள் கொட்டி தர வேண்டி, பலமுறை கோரிக்கை வைத்தும் அதனை அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இதேபோல் இந்த ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சுடுகாடு மற்றும் எரிமேடை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன என்று வேதனையுடன் தெரிவித்தார்.சங்கராபரணி ஆற்று வெள்ளப்பெருக்கு குறித்து மற்றொரு விவசாயி கூறுகையில், இந்தப் பகுதி புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டை ஒட்டி அமைந்துள்ளது. புதுச்சேரி பகுதியில் இருந்த தடுப்பணை பல ஆண்டுகளுக்கு முன்பு சேதம் அடைந்து, ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்றுள்ளதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இதேபோல, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சேதமடைந்த தடுப்பணைகளையும், புதுச்சேரி அரசு உடனடியாக கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரசு தடுப்புச்சுவர் அமைத்து தரவில்லை என்றால் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
