அரியலூர்:ஜெயங்கொண்டம் தொகுதிகளில் 23,695 பேர் நீக்கம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!!
12/09/2025
0
அரியலூர்:ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகியஇரண்டு தொகுதிகளில் இதுவரை 95 சதவீத எஸ்ஐஆர் படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்.அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து 23 ஆயிரத்து 695 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் இறந்தவர்கள், கண்டறிய இயலாதவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு என 23 ஆயிரத்து 695 பேர் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளனர்.இது அரியலூர் சட்டமன்ற தொகுயில் 4.86 சதவீதமாகவும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 4.06 சதவீதமாகும். மேலும் இரண்டு தொகுதிகளில் இதுவரை 95 சதவீத எஸ்ஐஆர் படிவங்கள் பெறப்பட்டுள்ளது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்தார்.முன்னதாக, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினையும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் காங்கிரஸ் பாஜக திமுக அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி முதல் எஸ்ஐஆர் என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கின. இந்த பணிகளில் தமிழகம் முழுவதும் 68 ஆயிரத்து 470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல் நாளில் இருந்தே வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 6 கோடியே 41 லட்சத்து 14ஆயிரத்து587வாக்காளர்கள்உள்ளனர்.அவர்களுக்கு வழங்குவதற்காக அதே அளவில் கணக்கீட்டு படிவங்கள் அச்சடிக்கப்பட்டன. அவற்றில் 6 கோடியே 35 லட்சத்து 99 ஆயிரத்து 698 படிவங்கள், அதாவது 99.20 சதவீதம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அவற்றில் 5 கோடியே 86 லட்சத்து 57 ஆயிரத்து 184 படிவங்கள் அதாவது 91.49 சதவீதம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
