# மருத்துவ கல்வியில் மாநில உரிமைகளை பறிப்பதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைளை வலியுறுத்தி, நாளை தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் நடத்தும் கறுப்புப் பட்டையணிந்து வகுப்புகளுக்குச் செல்லும் போராட்டத்தில், அனைத்து மருத்துவ மாணக்கர்களும் பங்கேற்க வேண்டும்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள்.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் இன்று(10.07.2023) சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி.
# "நெக்ஸ்ட் தேர்வை , ஒன்றிய அரசு புகுத்துவதை உடனடியாகக் கைவிட வேண்டும் .இது மாணவர்களுக்கு கூடுதல் சுமையை வழங்குவதோடு, மாநில உரிமைகளுக்கும் எதிரானதாக உள்ளது " என , தமிழ்நாடு முதலமைச்சர் , இந்திய பிரதமர் அவர்களுக்கு கடிதம் எழுதி யுள்ளது வரவேற்புக்குரியது.
பாராட்டுக்குரியது.
"நெக்ஸ்ட் " தேர்வை ரத்து செய்வதற்காக ,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளுக்கும் , சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் முழு ஒத்துழைப்பை வழங்கும். உறுதுணையாக இருக்கும் .
# மருத்துவப் படிப்பில் சேர்வதற்கும், வெளிநாடுகளில் சென்று மருத்துவம் படிப்பதற்கும் ,நீட் என்ற நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது. இது ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிராக உள்ளது.
இந்நிலையில், மருத்துவப் படிப்பை முடித்து வெளியேறுவதற்கு, தேசிய வெளியேறும் தேர்வு என்ற "நெக்ஸ்ட்
( NExT) தேர்வை ஒன்றிய அரசு புகுத்த முயல்கிறது.
அதாவது, இறுதியாண்டு மருத்துவத் எழுத்துத் தேர்வாக நடத்தப்படும் , MCQ அடிப்படையிலான ,கணினி வழித் தேர்வான "நெக்ஸ்ட் " முதல்கட்ட (NEXT STEP ONE)தேர்வில் வெற்றி பெற்றால் தான் பயிற்சி மருத்துவராக முடியும்.
பயிற்சி மருத்துவத்தை முடித்த பிறகு, "நெக்ஸ்ட்" இரண்டாம் கட்டத் தேர்வான ,கிளினிக்கல் (NEXT STEP TWO, CLINICAL) தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராக பதிவு செய்து கொண்டு தொழில் செய்ய முடியும்.
இந்தத் தேர்வுகள் , மாணவர்களை பயிற்சி மருத்துவராக்குவதற்கு முன்பும், பயிற்சி மருத்துவக் காலத்திலும் புத்தகப் புழுக்களாக மாற்றிவிடும். கிளினிக்கல் அறிவை,திறமையை வளர்த்துக் கொள்வதற்கு தடையாக அமையும். மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக மாறும்.
முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் 200 வினாக்கள் மட்டுமே உண்டு.அது மூன்றரை மணி நேரம் மட்டுமே நடக்கும் தேர்வாகும்.ஆனால் நெக்ஸ்ட் தேர்வோ 540 வினாக்கள் அடங்கியது.நெக்ஸ்ட் தேர்வு ஆறு தேர்வுகளாக மூன்று நாட்கள் காலை மற்றும் மாலை நடக்கும் தேர்வாகும். எனவே, முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான தேர்வு கடினமாக்கப்படுகிறது.
தற்பொழுது எம்பிபிஎஸ் இறுதி ஆண்டில் வெற்றி பெற ,மருத்துவம்,குழந்தைகள் மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம் என்ற நான்கு பாடப்பிரிவுகளில் மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெற்றால் பயிற்சி மருத்துவராக முடியும். அதை நிறைவு செய்த பின்பு,மருத்துவராக பதிவு பெற்று தொழில் செய்ய முடியும். ஆனால் நெக்ஸ்ட் தேர்வே இறுதியாண்டு தேர்வாக மாற்றப்படுவதால், முதலாம் ஆண்டு முதல் உள்ள 23 பாடங்களை படித்து ,ஆறு தேர்வுகளை எழுத வேண்டும். 540 MCQ கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். எனவே, எம்பிபிஎஸ் தேர்ச்சி பெறுவதற்கான தேர்வும், மிகவும் கடினமாக்கப்படுகிறது.
#ஒரு தகுதித் தேர்வையே (Qualifying Examination) போட்டித் தேர்வாக
( Competitive Examination)
மாற்றுவது சரியல்ல. இத்தேர்வை ஆயுஷ் போன்ற இதர மருத்துவப் படிப்புகளுக்கும் திணிக்க முயல்வது சரியல்ல. எனவே, நெக்ஸ்ட் தேர்வை கைவிட வேண்டும்.
# ஒரு தேர்வு மூலம் மட்டுமே மருத்துவர்களை திறமையானவர்களாக உருவாக்கிவிட முடியும் என்பது தவறான பார்வையாகும். மருத்துவப் படிப்பின் பொழுது வழங்கப்படும் மருத்துவக் கல்வியின் பாடத்திட்டம், மருத்துவக் கல்லூரிகளின் மேம்பட்ட கட்டமைப்பு வசதிகள், திறமையான பேராசிரியர்களின் பங்களிப்பு, நோயாளிகளை பரிசோதனை செய்து திறனை வளர்த்து கொள்வற் கேற்ப நோயாளிகளின் வரத்து, பயிற்சி மருத்துவக் காலத்தில் வழங்கப்படும் முறையான பயிற்சிகள் போன்ற பல காரணிகள் மருத்துவக் கல்வியின் தரத்தை தீர்மானிக்கின்றன. பதிவு பெற்ற மருத்துவரான பிறகும், வாழ்நாள் முழுவதும் மருத்துவர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்வதற்கு வழங்கப்படும் வாய்ப்புகளும், துறைசார்ந்த கூட்டுழைப்பும், அதன் வழியான அனுபவமும், புதிய அறிவியல் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வதில் அவர்கள் காட்டும் தனிப்பட்ட ஈடுபாடும் , மருத்துவர்களின் திறமையை மேம்படுத்திக் கொள்ள உதவுகின்றன. இவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாமல், ஒரு தேர்வின் மூலம் மட்டுமே மருத்துவர்களை திறமையானவர்களாக ஆக்கிவிட முடியும் என்பது அபத்தமாகும்.
# தேசிய அளவில் தேர்வுகளை மையப்படுத்துவதில் வணிக நோக்கமும் ,சித்தாந்த நோக்கமும் உள்ளன.
தேர்வுகளையே லாபமீட்டும் வணிகமாக்கி, அதன் மூலம் கிடைக்கும் லாபம் , ஒரு சில நிறுவனங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கம் இதில் அடங்கியுள்ளது.
அது மட்டுமன்றி, " 2030 ல், ஒரே தேசம் - ஒரே மருத்துவ முறை"(One Nation One Medical system) என்பதை கொண்டுவர ஒன்றிய அரசு முயல்கிறது.
அனைத்து மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைத்து, ஒரு புதிய மருத்துவமுறையை ,தனது வலதுசாரி சித்தாந்தத்திற்கு ஏற்ப உருவாக்க ஒன்றிய அரசு முயல்கிறது.
இது நவீன அறிவியல் மருத்துவத்தின் வளர்ச்சிக்கு தடையாக மாறும்.
அதை நீர்த்துப் போகச் செய்யும்.
காலாவதியான மருத்துவ முறைகளையும், போலி மருத்துவ அறிவியலையும், மூட நம்பிக்கைகளையும்,நவீன அறிவியல் மருத்துவ முறைகளோடு
ஒருங்கிணைக்க ( integrate) முயல்வது , தேவையற்ற குழப்பங்களை உருவாக்கும்.
மருத்துவ சேவைத் தரத்தை பாதிக்கும்.
இத்தகைய,பிற்போக்கான, வலது சாரி சித்தாந்தத்தை மருத்துவக் கல்வியிலும் ,சிகிச்சை முறைகளிலும் மேலாதிக்க உணர்வோடு ,உள்நோக்கத்தோடு புகுத்துவதற்கு ஒன்றிய அரசு முயல்கிறது.
தனது வலது சாரி ,பிற்போக்குப் பண்பாட்டின் கூறாக மருத்துவத்தை மாற்ற முயல்கிறது. நவீன அறிவியல் மருத்துவத்தின் மதச்சார்பற்ற தன்மையை சீர்குலைக்க முயல்கிறது.
மருத்துவக் கல்வியை காவிமயமாக்குவதற்காகவும், தேர்வுகளால் கிட்டும் வருவாயை ஒரு சில பெரு நிறுவனங்கள் அபகரிக்க உதவவும், ஒன்றிய அரசு,
மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு
( நீட்) , மாணவர்களை சேர்ப்பதற்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு, வெளியேறும் தேர்வு
( நெக்ஸ்ட்) போன்ற அனைத்தையும் மையப்படுத்துகிறது.
தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்கிறது.
மருத்துவக் கல்வியில்
மாநில உரிமைகளை முழுமையாக பறிக்கிறது.
இது கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.
எனவே, ஒன்றிய அரசு நெக்ஸ்ட் தேர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்.
"நெக்ஸ்ட் " தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் ( TNMSA), நாளை தமிழ்நாடு முழுவதும் நடத்தும் கறுப்பு பட்டை அணிந்து வகுப்புகளுக்குச் செல்லும் போராட்டத்திற்கு,சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
இப்போராட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள்,தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவ மாணாக்கர்களும் பங்கேற்க வேண்டுமென, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
# நாடு முழுவதும் 100 % மருத்துவ இடங்களுக்கும் ஒன்றிய அரசே, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த முயல்வதை கைவிட வேண்டும். இது பல்வேறு குழப்பங்களை உருவாக்கும்.
# மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு மாநில அரசும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசும் மட்டுமே , இறுதி கட்டம் வரை, கடைசி இடம் வரை மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் நேரடியாக மாணவர் சேர்க்கையை நடத்திட எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது.
# இளநிலை மருத்துவக் கல்வியின் பாடத்திட்டத்தில் பிற்போக்கான மாற்றங்களை செய்வதற்காக ,ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பை( UG medical education regulations) திரும்பப் பெற்றிருப்பது வரவேற்புக்குரியது. அத்தகைய பிற்போக்கு மாற்றங்களை செய்வதற்கு மீண்டும் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.
# தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்களின் பணி நேரத்தை அதிகரித்திருப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.
இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் , சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, பாரா மெடிக்கல் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.தனவந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
இவண்,
டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,
பொதுச் செயலாளர்,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
9940664343
9444181955