சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவுத் துறை சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் திருவள்ளுவர், காந்தியார் ஆகிய தலைவர்களின் உருப் படங்கள் மட்டுமே வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி, ஆணை பிறப்பித்துள்ளது.
பல உயர்நீதிமன்றங்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருப் படங்களை வைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் முன்வைத்த வேண்டுகோள் இதன் மூலம் மறுக்கப்பட்டுள்ளது. ஆலந்தூர் நீதிமன்ற வாயிலில் அமைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருச்சிலை இதன் காரணமாக அகற்றப்பட்டுள்ளது. காஞ்சி மாவட்ட முதன்மை நீதிபதி இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவப் படம் நீதிமன்றங்களில் இடம்பெறக் கூடாது என்ற புதிய போக்கு பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். மற்ற தலைவர்களின் உருவப்படங்கள் வைக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற உயர்நீதிமன்றத்தின் கருத்தும் ஏற்கதக்கது அல்ல.
எனவே, புதிய ஆணையை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் திரும்பப் பெறுமாறும், திருவள்ளுவர், காந்தியார் ஆகிய படங்கள் வரிசையில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவப் படமும் இடம்பெற அனுமதிக்குமாறும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.