திருச்செந்தூர்: கடலில் மூழ்கிய பக்தரை கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டனர்!!!
11/14/2025
0
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல திருச்செந்தூர் வந்திருந்த திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (40), கோயில் வளாகத்தில் முடிகாணிக்கை செலுத்திவிட்டு கடலில் நீராடி கொண்டிருந்தார்.அப்போது கடல் அலையில் சிக்கி தத்தளித்து நீரில் மூழ்கினார். இதைக் கண்ட கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்கள் சிவராஜா, ஆறுமுகநயினார், இசக்கி விக்னேஷ் ஆகியோர் விரைந்து கடலில் குதித்து நீரில் மூழ்கியவரைத் தேடினர். அப்போது அவர் கடலில் மிதந்து கொண்டிருந்தார். உடனடியாக பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை மீட்டு கரைக்குக் கொண்டுவந்து முதலுதவி அளித்து சங்கரின் வாய் வழியாக நீர் வெளியேற்றினர். சிறிது நேரத்தில் அவர் கண் விழித்தார். அவர் உயிருடன் மீட்கப்பட்டதையடுத்து, முதுலுதவி மையத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து அவசர ஊர்தியில் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கும், அதன் பின்னர், தூத்துக்குடி மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பக்தரின் உயிருடன் மீட்ட கடற்கரை பாதுகாப்புப் பணியாளர்களுக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
