*நியூஸ்7 தொலைக்காட்சி மானாமதுரை செய்தியாளர் ரஞ்சித் குமார் மறைவு : சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்ணீர் அஞ்சலி*
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளராக பணியாற்றி வந்த ரஞ்சித்குமார் (வயது 35) இன்று 28-07-2023 வெள்ளிக்கிழமை காலை மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி பெரும் வேதனையைத் தருகிறது.இன்று காலையில் மயங்கி விழுந்த ரஞ்சித்குமாரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் - அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.
இந்த இளம் வயதில் செய்தியாளர் மரணம் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. மானாமதுரை செய்தியாளர் *ரஞ்சித்குமார் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.*
35 வயதான ரஞ்சித்குமாரை இழந்து வாடும் அவரது மனைவி , ஐந்து வயது மற்றும் ஒரு வயதில் இரண்டு பெண் குழந்தைகள், குடும்பத்தினரை நினைக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது வயதைக் கருதி செய்தியாளர் ரஞ்சித் குமார் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து *10 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்ய வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சரை அன்புடன் வேண்டுகிறோம்.*
மறைந்த ரஞ்சித் குமார்,கடன் பிரச்சினை மற்றும் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.35 வயது ரஞ்சித்குமாரின் மரணம் வேதனையுடன் சில கேள்விகளை எழுப்புகிறது. பத்திரிகையாளர்கள் தங்களின் உடல் நலன் குறித்து அக்கறைக் கொள்ளாமல் இருப்பது. உரிய ஊதியம் இல்லாதது, சரியான வேலைவாய்ப்புகள் இல்லாதது பொருளாதார நெருக்கடிகள்,பல்வேறு விதமான மன அழுத்தங்கள் என பலவிதங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு குறிப்பாக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை *மாவட்டங்களில் தாலுகா அளவில் ஆண்டுதோறும் ஊடகவியலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்த வேண்டும்* என்ற கோரிக்கையை இந்த இரங்கல் செய்தியுடன் முன் வைக்கின்றோம்.
பாரதிதமிழன்
இணைச் செயலாளர்
*சென்னை பத்திரிகையாளர் மன்றம்*
சென்னை
28.07.2023