தமிழக முதலமைச்சரை எதிர்நோக்கும் பின்தங்கிய மாவட்டத்திலுள்ள மக்கள்.....

sen reporter
0


தமிழகத்தில் பின்தங்கிய மாவட்டத்திலுள்ள மக்கள் முதலமைச்சரை தொலைக்காட்சி திரையில்தான் பார்க்க முடிகிறது.மேலும், தேர்தல் நேரத்தில்கூட முதலமைச்சர் சாலை வழியாகத்தான் செல்கிறாரே தவிர ஏழை பாமர மக்களின் பகுதிகளில் சென்று அவர்களை பார்வையிட்டால் நன்றாக இருக்கும் என கிராமப்புற மக்கள் ஏங்குகின்றனர். பெரும்பாலும், பின்தங்கிய மாவட்டங்களிலுள்ள ஏழை மக்கள் சாப்பாடில்லாமல், வீடுகள் இல்லாமலும், கழிவறைகள் இல்லாமலும் கண்ணீருடன் வாழ்கிறார்கள். பின்தங்கிய மாவட்டங்களில் அரசு நலத்திட்டங்களும் சரியாக செயல்படவில்லை. குறிப்பாக, அரசால் நியமிக்கப்படும் அதிகாரிகளும் முறையாக மக்களிடம் நலத்திட்டங்களை கொண்டு சென்று சேர்ப்பதில்லை.இதனை தொடர்ந்து பின்தங்கிய மாவட்டங்களில் கிராமப்புற பகுதியில் வாழும் மக்கள் டிகிரி, பிஹெச்டி வரை படித்துவிட்டு தென்னைஓலை பின்னியும்,ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருக்கும்  சூழ்நிலையும் உருவாகியுள்ளது. சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் படிக்க வசதியும் கிடைக்கிறது தொடர்ந்து அவர்களுக்கு அரசு வேலைகளும் கிடைக்கிறது.ஆனால்,கிராமப்புற ஏழை மக்கள் டிகிரி முதல் பிஹெச்டி வரை படித்துவிட்டு அவர்களுக்கு எப்படி அரசு வேலைக்கு செல்வது என்று தெரியாமல் உள்ளனர்.இதுகுறித்து அந்த மாணவர்கள் பஞ்சாயத்து தலைவர்களிடம் கேட்டாலும் அவர்களுக்கும் தெரியவில்லை என்று கூறும் அவலநிலை உண்டாகியுள்ளது. இதுபற்றி பொதுநலமாக செய்யக்கூடியவர்களும் சரியாக செயல்பட முன்வருவதில்லை. இதனை கருதி தமிழக முதலமைச்சர் பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு தாலுகாதோறும் ஒரு அதிகாரியை நியமனம் செய்து எத்தனை நபர்கள் படித்துள்ளார்கள் என்றும், அவர்கள் எத்தனை டிகிரி முடித்துள்ளார்கள் என்றும் பதிவு செய்தும் மேலும், அவர்களுக்கு அரசு வேலைகளையும்,அரசு கொண்டுவரும் திட்டங்களையும் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.மேலும், திருமணத்திற்கு வழங்கும் அரசு உதவித்திட்டம் கிராமங்கள் தோறும் சென்றடைவதில்லை. இதேபோல் அரசின் பல நலத்திட்டங்கள் கிடைக்காமல் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நல்லதுசெய்ய  கொண்டு வரும் நலத்திட்டங்கள் சரியாக சென்றடையாமல் கிராமப்புற மக்கள் பயனடையாமல் உள்ளனர்.கிராமப்புற பகுதியில் ரேஷன்கடையில் சரியான முறையில் உணவுப்பொருள்களும் வழங்கப்படுவதுமில்லை, அளந்துபோடும் முறையும் சரியாக பின்பற்றப்படுவதுமில்லை.சென்னை போன்ற பெருநகரங்களில் விளையாட்டு மைதானத்தை திறந்துவைக்கும் தமிழக முதலமைச்சர் அவர்களை திரையில் பார்க்கும் கிராமப்புற மக்களுக்கு சந்தோசம் ஏற்பட்டாலும், கிராமப்புறத்தில் விளையாட்டு திடல் இல்லாமல் ஏக்கம் கொள்கின்றனர்.இதன்தொடர்ச்சியாக கிராமப்புறங்களில்  பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு போதிய பேருந்து வசதிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். கிராமப்பகுதிகளில் ஓட்டை, உடைசலான உடைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால் ஏழை மக்களும், பள்ளி மாணாக்கர்களும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், கிராமப்புறத்தில் உள்ள பள்ளிகளில் கழிவறைகள் இல்லாமல் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துதான் கழிவறையை மாணாக்கர்கள் உபயோகிக்கும் சூழ்நிலை உள்ளது.இதனால் பள்ளி மாணாக்கர்களுக்கு சிறுநீர் பிரச்சனைகள் போன்ற பல நோய்கள் ஏற்படுகின்றன. வயதானவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையும் கிராமப்பகுதியில் உள்ள மக்களுக்கு  சென்றடைவதில்லை. இதுகுறித்து யாரிடம் அணுகுவது என்றும் தெரியாமல் உள்ளனர். அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முன்வராமல் உள்ளனர்.ஓய்வூதிய திட்டம் பற்றி அரசு அதிகாரிகள்,முறைப்படி கிராமப்புற பகுதிகளில் சென்று சேர்க்காமல் கிடப்பில் போடும் நிலை உள்ளது.பொதுவாக மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றி கிராமப்பகுதிகளில் தெரியாமல் உள்ளது.மேலும், கிராமப்புற மக்கள் அதிகமாக விவசாயம் செய்வதை தொடர்ந்து உழவர் காப்பீடு அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்றும், யாரை அணுகுவது என்றும் தெரியாமல் உள்ளனர். இதனை தொடர்ந்து,சிறுதொழில் பற்றி தெரியாமல் உள்ள கிராமப்புற மக்களுக்கு சிறுதொழில் பயிற்சி சொல்லிக்கொடுக்க அரசு அதிகாரிகள் யாரும் முனைப்பு காட்டுவதில்லை. குறிப்பாக, அரசால் வழங்கப்படும் கடனுதவி கிராமப்புற மக்களுக்கு கிடைக்காமல் உள்ளது. இந்த கடனுதவி வாங்கும் மற்றும் அணுகுமுறை பற்றி தெரியாமல் உள்ளனர்.இதுகுறித்து அனைத்தும் தெரிந்த அரசு அதிகாரிகளும் கிராமப்புற மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இல்லை. இதனை கருதி தமிழக முதலமைச்சரின் நேரடி பார்வையில் ஒவ்வொரு கிராமப் பகுதிக்கும் ஒரு அதிகாரியை நியமித்து அரசின் நலத்திட்டங்கள், வேலைவாய்ப்புகள் போன்றவற்றை கிராமப்புற ஏழை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.அதனை தமிழக முதலமைச்சர் அவர்கள் நேரடி பார்வையிட்டு கிராமப்பகுதிகளில் தனிக்கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என கிராமப்புற மக்கள் புலம்புகின்றனர். கிராமப்புற மக்களின்  வலிகளை உணர்ந்து புரிந்துகொண்ட முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி ஏழை மக்களின் மனதில் இடம்பிடித்த மாதிரி, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவரின் மகனும்,தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் வழிப்படி ஏழை மக்களுக்கு நல்ல திட்டங்களும், அரசு வேலைகளையும் உருவாக்கி தருவார் என  பின்தங்கிய மாவட்டங்களிலுள்ள ஏழை மக்கள் காத்திருக்கின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top